தாய்-2 குழந்தைகள் கொலையில் குடும்ப நண்பர் கைது மலேசியாவுக்கு தப்பிய 3 பேரை பிடிக்க நடவடிக்கை

18/11/2010 15:06

dailythanthi.com

ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணும், அவருடைய 2 குழந்தைகளும் கடத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குடும்ப நண்பரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்திக்கொலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஒரு பெண்ணும், அவருடைய 2 குழந்தைகளும் கடந்த 11-ந் தேதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் ராமநாதபுரம் அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு (வயது 27), அவருடைய மகன் முகமது அஸ்லம் (7), மகள் ஹாஜிராபானு (5) என்று தெரியவந்தது.

இதனையடுத்து வாடிப்பட்டி போலீசார் ராமநாதபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இதில், "ஆதிலாபானு சாத்தான்குளத்தில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்காக ஒருவருடன் குழந்தைகளை அழைத்துச்சென்றார். அதன்பின் அவர்கள் வீடு திரும்பவில்லை'' என்று அவருடைய தாயார் சைபுன்னிஷா போலீசாரிடம் கூறினார்.

குடும்ப நண்பர்

போலீசார் நடத்திய விசாரணையில் ஆதிலா பானுவையும், அவருடைய குழந்தைகளையும் அழைத்துச்சென்றவர் வாலாந்தரவையை சேர்ந்த முனியசாமி மகன் ஜெயக்குமார் (27) என்பதும், குடும்ப நண்பர் என்பதும் தெரியவந்தது.

ஜெயகுமாரையும், இதில் தொடர்புடையவர்களையும் பிடிப்பதற்காக வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ராமநாதபுரம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் வாலாந்தரவை பஸ் நிறுத்தத்தில் நின்ற ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலத்தையும் போலீசார் வாங்கினர். அதில் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது:-

"ஆதிலாபானுவின் கணவர் முத்துச்சாமி என்ற முகமதுவுக்கும், எனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்தது. அவரது வீட்டிற்கு நான் அடிக்கடி சென்று குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வேன்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்றபோது கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக ஆதிலாபானு கூறினார். உடனே நான் தீபாவளி சமயமாக உள்ளதால் இப்போது தட்டுப்பாடு இருக்கும். குடோனில் கேட்டு வாங்கித்தருகிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.

மூளைச்சலவை

சிறிது நேரத்தில் என் அத்தை மகன் முனியசாமி பார்த்தபோது, "பணக்காரப் பெண்ணாக உள்ளாள். அவளை கடத்திச்சென்று வைத்துக்கொண்டு தாயாரிடம் பணம் பறித்துக்கொண்டு பின்னர் விட்டு விடலாம்'' என்று வலியுறுத்தினான். ஆனால் நான் மறுத்தேன்.

எனினும் என்னை மூளைச்சலவை செய்வதுபோல் செய்து பண ஆசை காட்டினான். உடனே நான் சம்மதித்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஆதிலாபானுவின் வீட்டிற்கு சென்றேன். குடோனுக்கு சென்று கியாஸ் சிலிண்டர் வாங்கப் போகலாம்; என்னுடன் வாருங்கள் என கூறினேன். அதன்படி ஆதிலாபானு தன் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

அவர்களை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு நான் ஓட்டிச்சென்றேன். குடோனுக்கு அருகில் சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென கறுப்பு நிற கார் வந்தது. நான் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன்.

காருக்குள் இருந்து சாத்தான்குளத்தை சேர்ந்த ஷாகுல் (29), மணிவண்ணன் (29), முகமது சர்ஜித் (30), என் அத்தை மகன் முனியசாமி (30) ஆகியோர் இறங்கி ஓடி வந்தனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து என்னை அவர்கள் தள்ளிவிட்டு ஆதிலாபானுவையும், அவருடைய 2 குழந்தைகளையும் காரில் கடத்திச்சென்று விட்டனர். அதன்பின் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. பிணமாக கிடந்த பின்புதான் அவர்கள் கொலை செய்யப்பட்டதே எனக்கு தெரியும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சினிமா நடிகர்

இந்த கார் போலீஸ் தேடுபவர்களில் ஒருவரான ஷாகுலுக்கு சொந்தமான காராகும். அவர் இந்தி படம் ஒன்றில் வில்லனாக நடித்து உள்ளார். படம் இன்னும் வெளியாகவில்லை. சினிமாவில் நடித்தபோது உள்ள படத்தை காரில் உள்ள சி.யில் வைத்திருப்பார்.

ஷாகுலின் காரை கைப்பற்றி நடத்திய விசாரணையில்தான் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இந்த நிலையில் ஷாகுல் அமீது, மணிவண்ணன், முகமது சர்ஜித் ஆகியோர் மலேசியாவுக்கு தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய மலேசிய போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. முனியசாமியும் தலைமறைவாகிவிட்டதால் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை போலீசார் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி சசிரேகா உத்தரவிட்டார். அதன்பின் ஜெயக்குமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.