தீண்டாமை சுவர் இடிப்பு: 24 ஆண்டுகளுக்கு பிறகு திறந்து விடப்பட்டது

20/11/2010 19:05

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முதல் தெரு, 2-வது தெரு மற்றும் சக்திவேல் காலனிக்கு இடையே 220 அடி நீளம் மற்றும் 12 அடி உயரத்தில் பிரமாண்ட சுவர் கட்டப்பட்டு இருந்தது.
 
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு தனியாரால் இந்த தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இந்த சக்திவேல் காலனியில் 1960-ம் ஆண்டு நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. சக்திவேல் காலனியில் சுமார் 60 வீடுகள் வரை உள்ளன.

இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக உள்ளனர். இந்த தடுப்பு சுவர் காரணமாக முத்துமாரியம்மன் கோவில் முதல்தெரு மற்றும் 2-வது தெருவில் உள்ள மக்கள் 1 கிலோ மீட்டர் சுற்றி மெயின்ரோட்டுக்கு செல்ல வேண்டியது இருந்தது.
 

 


அதே போல் சக்திவேல் காலனி மக்கள் முத்துமாரியம்மன் கோவில் தெருவுக்கு வர சுற்றித்தான் வரவேண்டும்.சர்ச்சைக்குரிய இந்த தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைசேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.


இந்த போராட்டம் சில நாட்களாக தீவிரமடைந்தது. கடந்த 9-ந் தேதி சர்ச்சைக்குரிய சுவரை இடிக்கப்போவதாக திருச்சி மாநகர மார்க்சிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர். வருகிற 23-ந் தேதிக்குள் சர்ச்சைக்குரிய சுவரை இடிக்காவிட்டால் நாங்களே அந்த சுவரை இடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்தனர்.


இந்த நிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் 400 போலீசார் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவரை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சுவரை இடித்து தள்ளினார்கள்.


முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு மக்கள் சாலையை கடந்து செல்லும் அளவுக்கு இரண்டு இடங்களில் சுவர் இடிக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது. சுவர் இடிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

nakkheeran.in