தீவிரவாதம் – முஸ்லீம்கள் செய்ய வேண்டியது என்ன?

20/07/2011 16:58

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

 

மீண்டும் தாக்கப்பட்ட மும்பை, பரபரப்பாக செய்திகளை தர துடிக்கும் மீடீயாக்கள், தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், மீண்டும் தம்மீது பலி விழுந்துவிடுமோ என்று அஞ்சிக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள், எப்படியாவது இந்தத் தாக்குதலையும் முஸ்லீம்கள் மீதே சுமத்திவிட்டு சமாளிக்கத் துடிக்கும் காவல்துறையும் சங்பரிவாரங்களும் என நாளுக்கு நாள் மாறிவரும் செய்திகள்.

 

கடந்த தீவிரவாத தாக்குதல்களில் நடந்து முடிந்த 1 மணி நேரத்துக்குள் லஷ்கர், இந்தியன் முஜாஹிதீன், சிமி அல்லது ஹர்கதுல் ஜிஹாதி என்ற பங்களாதேச அமைப்பு என்று செய்தி வெளியிடும் காவல்துறையும், உள்துறை மற்றும் மீடியாக்கள் இந்த தாக்குதலில் சற்று அடக்கி வாசித்தது. ஆனாலும் மீண்டும் அதே பெயர்கள் தான் இன்றைய மீடியா செய்திகளில் இடம்பெருகின்றன.

 

இந்த தாக்குதலுக்குப் பின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை சில ஆங்கில செய்தி நிறுவனங்கள் தினமும் நேரலைகளாக ஒளிபரப்புச் செய்து வருகின்றன. அதில் பல முஸ்லீம்களும் இடம்பெற்று தங்களுடைய கருத்துக்களை ஏதே குற்றவாளிகளைப் போல் எடுத்துரைத்து வருகின்றனர். அவர்களில் சற்று வித்தியாசமானவர் மற்றும் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் சகோதரர் சலாகுதீன் ஒவைசி எம்.பி அவர்கள் (மஜ்லீஸே இத்திஹாதில் முஸ்லிமீன் MIM– தலைவர்)

 

மும்பைத் தாக்குதலின் பின்னனியில் உள்நாட்டு தொடர்பு பற்றியான CNN-IBM நேரலைச் செய்தி நேரத்தில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதில் நாங்கள் இந்தியர்கள் இல்லையா, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் உள்நாட்டு தெடர்பு என்று இங்கே பேசுகிறீர்கள் இது போன்ற நிகழ்வுகள் உள்நாட்டு முஸ்லீம்களை தீவிரவாதிகளாக மக்கள் பார்க்கத் தூண்டுகிறது. முதலில் தெளிவாக விசாரித்த பின் யார் செய்தார்கள் என்று உறுதியான பின் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டுமே தவிர. எந்த தாக்குதல் நடந்தாலும் உடனே முஸ்லீம் சமுதாயத்தின் நோக்கி காவல் துறை திரும்புவதும் சில இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதும் ஏற்புடையதல்ல. உதாரணத்திற்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்குப்பின் 72 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர் பின் என்னவாயிற்று அந்த குண்டு வெடிப்பிற்கு பின்னால் ஒரு இந்து தீவிரவாத அமைப்பு தொடர்பு வெளிப்பட்டது. எனவே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது இது போன்ற சட்டரீதியான தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றார். தீவிரவாதத் தாக்குதல்களில் முஸ்லீம்களும் உயிரிழக்கும் நிலையில் எப்படி இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என வினவினார்.

 

மேலும் மும்பை போன்ற பெரும் நகரங்களில் வெளியாட்கள் வந்து போவதை தடுக்க முடியாது அதே போல் அந்நியர்களின் ஊடுருவளையும் தடுக்க முடியவில்லை என்றார். காவல் துறை குறுட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் ஒரு சமுதாயத்தை குறிவைத்தே விசாரனை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். அதற்கு குறுக்கிட்ட மும்பை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் விசாரனை நடத்துவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அதையே நாங்கள் பின்பற்றுகிறோம் எந்த சமுதாயத்திற்கு எதிராகவும் நடந்துகொள்ளவில்லை என்றார். சந்தேகப்பட்டவர்களை விசாரிக்கிறோம் என்றார். பின் அதற்கு பதிலளித்துப் பேசிய சகோதரர் ஒவைசி மீண்டும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நடத்தப்படும் விசாரனை என்றார் பின் விசாரனையின் போது மாரடைப்பால் மரணம் அடைந்த சகோதரர் பயாஸ் உஸ்மானியின் மரணம் குறித்து அனைவரும் இயற்கை மரணம் என்ற போதிலும் அது ஒரு சமூக சார்ந்த மன அழுத்தம் (Sociofobia) என்றார் அதுவே அவரது மாரடைப்புக்கும் மரணத்திற்கும் காரணம் என்றார் அப்படிப்பட்ட மன அழுத்தத்தை நானும் மற்ற முஸ்லீம்களும் உணர்கிறோம் என்றும் கூறினார். அவரது கருத்தை கேட்டு முன்னால் புலனாய்வுத் துறையின் தலைவரும் மஹாராஸ்டிர காவல்துறை ஆய்வாலரும் சற்று தமது கருத்துக்களை நடுநியைாக மாற்றிக் கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சி ஒரு விசயத்தை ஆழமாக பதியவைத்தது. முஸ்லீம்கள் தமது கருத்துக்களை ஆழமாகவும் வெளிப்படையாகவும் பதியவைக்கவேண்டும் யாருக்காகவும் (அரசியல் தலைவர்கள் என்றும் கூட்டணி கட்சிகள் என்றும் நமக்கு எதிரில் இருப்பவர்கள் எதுவும் நினைத்துக் கொள்வர்கள் என்றும் மற்றும் தேவையில்லாத பயம் போன்றவை) நம்மை வளைத்துக் கொள்ளக் கூடாது அப்படிச் செய்தால் அது நம் சமுதாயத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும் என்பதை உணரவும் முடிகிறது.

 

இது தவிர இஸ்லாத்தின் பெயராலும் ஜிகாத்தின் பெயராலும் சில இளைஞர்கள் ஏஜென்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற ஒரு கருத்தும் அந்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது.

 

ஜிஹாதிகள்

ஜிகாத் என்ற அரபு மொழிப்பதத்திற்கு உழைத்தல், பாடுபடுதல், போராடுதல், அறப்போர் போன்ற விளக்கங்களும் அவை சார்ந்த பல்வேறு வசனங்களும் திருமறைக் குர்ஆனில் உள்ளன. ஆனால் இந்தச் சொல் அறப்போர் என்ற பதத்தில் மட்டுமே பெரும்பாலான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதோரால் பார்க்கப்படுகிறது. அதுவும் அறப்போர் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொள்ளப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதை மறுக்க முடியாது. இஸ்லாம் போர் களத்தில் போருக்காக வந்திருந்த பெண்களையும் குழந்தைகளையும் கூட கொள்ளக் கூடாது என்று கூறுகிறது அதே நேரத்தில் தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்வது நிரந்தர நரகிற்கு அழைத்துச் செல்லும் படுபாதக செயல் என்று இஸ்லாம் கூறுகிறது அப்படி இருந்தும் சில முஸ்லீம்கள் இது போன்ற தவறை செய்து வருகின்றனர். அவை அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமானது அது மட்டுமில்லாமல் அது உலக அரங்கில் முஸ்லீம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் ஒரு தவரான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிட்டது என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது.

 

மீடியாக்கள் இக்கருத்தை உலகம் முழுதும் கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் மீடியாக்கள் இது விசயத்தில் சொல்வதெல்லாம் பொய் என்ற வாதமும் ஏற்புடையதல்ல. மீடியாக்கள் தமது பணியை சிரமமின்றி செய்ய சில முஸ்லீம்கள் செய்யும் தவறு பேருதவியாக இருக்கிறது என்பதே உண்மை.

 

25-73. (அளவற்ற அருளாளனின் அடியார்களான) அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

 

திருமறையின் இந்த வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதாக யார் எதை கூறினாலும் அதை அப்படியே நம்பவோ அதை செயல்படுத்தவோ நமக்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பதை உணரலாம். பெரும்பாலான ஜிஹாதிகள் தமது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு எடுத்துவைக்கும் முதல் விசயம் திருமறையில் ஜிஹாத் சம்மந்தமான வசனங்கள் தான். அப்படி கூறினாலும் அதை ஆய்வு செய்யாமல் அதை நடைமுறைப்படுத்துவது தவறாகும். உண்மையில் இந்தவசனம் அப்பாவிகளை கொள்ளச் சொல்கிறதா? அல்லது எந்த காலத்தில் போரை வழியுறுத்துகிறது போன்ற ஆய்வுக்குப்பின்னே உண்மையான அடியார்கள் அதை செயல் படுத்துவார்கள் என்று இந்த வசனம் கூறுகிறது. அல்லாஹ்வுடைய வசனத்தையே ஆய்வுக்குப் பின் நடைமுறைப்படுத்த இஸ்லாம் கூறும்போது மற்ற உலக விசயங்களுக்கு எந்த அளவு முக்கியத்தவம் கொடுப்பது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரைகள், கலவரங்கள், முஸ்லிம் விரோதப்போக்கை போதிக்கும் இயக்கங்கள் ஆகியவைதான் இவர்கள் ஜிஹாதுக்காக எடுத்துவைக்கும் காரணங்கள். அத்துடன் சேர்த்து, சமூக பாதுகாப்பு, இஸ்லாமிய ஆட்சி மற்றும் ஒற்றுமை போன்றவை உட்பட, எல்லாம் தற்போது ஜிகாதிகளின் முக்கிய கொள்கைகளாக மாறிவிட்டது. அனைத்து முஸ்லீம்களுக்கம் இஸ்லாமே பொதுக்கொள்கையாக இருக்கவேண்டுமே தவிர இஸ்லாத்தின் ஒரு சிரிய பகுதியல்ல. இஸ்லாம் கூறும் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நான் நினைப்பதையோ அல்லது ஒரு இயக்கத்தின் தலைவர் நினைப்பதையோ முஸலீம்கள் பின்பற்றக் கூடாது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும்

 

 

இதில் சில அமைப்புகள் எந்த வித நோக்கமோ கொள்கையோ இல்லாமல் செயல்படுகிறது. இந்தியாவில் உல்பா தீவிரவாதிகள் மற்றும் நக்சல் தீவிரவாதிகள் எல்லாம் தமக்கென ஒரு கொள்கை, கோரிக்கை அதை பெறுவதற்கு என்று அவர்களது தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் சிலர் குண்டுவைக்கின்றனர் அது ஏன்? அவர்களது நோக்கம் என்ன? இதன் மூலம் அவர்கள் அடைய நினைப்பது என்ன? என்ற எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை அப்பாவி மக்களை கொள்வது ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல் இல்லையா? இதில் யாரையும் நியாயப்படுத்தும் நோக்கம் இல்லை. உண்மையை நடுநிலையோடு எடுத்துரைப்பதைத் தவிர.

 

இஸ்லாமிய அடிப்படையில் போர் செய்ய வேண்டுமானால் இஸ்லாமிய ஆட்சி இருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் வாழத்தகுதியான இடத்திற்கு ஹிஜ்ரத் (இடப்பெயர்ச்சி) செய்ய வேண்டும் என்பது தான் இந்தியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்களுக்கு இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறை.

 

முஸ்லிம் விரோத சக்திகள்

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் முஸ்லீம் விரோதபோக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு நான் முன்னர் குறிப்பிட்ட காரணங்களும், இஸ்லாமும் முஸ்லீம்களும் மேலைநாட்டு கலாச்சரத்திற்கு பெரும் சவாலாக இருப்பதும், உலகின் மெஜாரிட்டி மதமாக கருதப்படும் கிருஸ்தவத்தை மத்திய கிழக்கு மற்றும் முஸ்லீம்கள் மத்தில் கொண்டுசெல்வதில் அவர்கள் சந்திக்கும் பெரும் சவால்களும் இதற்குக் காரணம் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருப்பதும் அதனால் இஸ்லாத்தை சரியாக ஆய்வு செய்ய முடியாமல் போனதும் இதற்கு ஒரு காரணம். இல்லாவிட்டால் இஸ்லாம் இன்று உலகின் மெஜாரிட்டி மார்க்கமாக உருவெடுத்து இருந்திருக்கும். பல்வேறு சிலுவைப் போர்களை நடத்தி உலகின் பெரும் பகுதியை தம் கட்டுப்படாட்டில் வைத்திருந்த மேலை நாட்டவர்களால் மத்திய கிழக்கில் அந்த அளவுக்கு தமது கொடியை நிலைநாட்ட முடியவில்லை. ஏனென்றால் அசைக்க முடியாத சத்தியக் கொள்கை. இவை மட்டுமில்லாமல் இன்னும் சில அரசியல் காரணங்களும் உண்டு அதில் முஸ்லீம் நாடுகளில் இருக்கும் இயற்கை வளம் மிக முக்கியமான காரணமாகும்.

இதனால்தான் முஸ்லீம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் தொடர் தாக்குதலை பல முனைகளில் இருந்து நடத்தப்படுகின்றது. அடக்குமுறைகள், போர்கள், விசாரனை என்ற பெயரில் சித்திரவதைகள் மற்றும் செய்திகள் என்ற பெயரில் தவறான கட்ணோட்டத்தை உருவாக்குவது என பல அவதாரங்களின் மூலம் ஒரு சமுதாயம் தாக்கப்படுகிறது. இதை எதிர்கொள்ளும் அறிவும் திரமையும் முஸ்லீம்களிடம் இல்லாமல் போனது பெரும் பின்னடைவே. தாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை உணராதவர்களாகவே இன்றைய சமுதாய மக்கள் இருக்கின்றனர். பெரும்பாலான முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் மேலைநாட்டவர்களின் காலடிகளில் இருப்பது அதற்கு மிகப்பெரிய சான்று.

 

தற்போது அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சி அரபு நாட்டு ஆட்சியாளர்களை விட மேலைநாட்டவர்களை ஆட்டம் கானச் செய்துள்ளது. எனவேதான் இத்தனை வருடங்களாக பாலஸ்தீன மக்களின் படுகொலைகளுக்கு களம் இறங்காத நேட்டோ படைகள் சிரியாவில் மக்களை கடாபி கொள்கிறார் என்று களம் இறங்கியுள்ளது. ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதையாக இவர்களின் நோக்கம் சிரியாவை சுரண்டுவதே தவிர மக்களை காப்பாற்றுவது அல்ல. புரட்சியாளர்கள் நாளை ஆட்சியமைத்தால் அவர்களுக்கு அதரவாக களம் இறங்கிய நேட்டோ படைகளுக்கும் அதில் பங்கு கிடைக்கும் அல்லவா. பாலஸ்தீனத்தில் களம் இறங்கினால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் அங்கு இருப்பதைத் தான் இஸ்ரேல் சுரண்டிக் கொண்டு இருக்கிறதே. அந்த நண்பனுக்கு தொல்லை தரளாமா? இது தான் இன்றைய மேலை நாட்டவரின் மனிதாபிமானம்.

 

இந்தியா போன்ற நாடுகளில் வரலாற்றை திரித்து பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக திருப்பிவிடும் நடவடிக்கைகள் பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு இன்று அவர்களை விட்டால் காங்கிரஸுக்கு மாற்றாக நாட்டை ஆட்சி செய்ய வேறு அரசியல் கட்சி இல்லை என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். ஆனால் நம் சமுதாயம் இப்போதுதான் விழிக்கத் தொடங்கியுள்ளது. விழித்த உடனேயே ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்றும் புரட்ச்சி செய்கிறோம் என்றும் கிளம்பிவிட்டோம். பொருமையாக நிதானமாக காலப்போக்கில்தான் நாம் நினைத்தனை சாதிக்க முடியும். முதலில் நமது சமூகத்தை ஒழுங்குபடுத்துவது, நமக்கு நேர்ந்துள்ள அவமானங்களைத் துடைப்பது, வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவருவது, இழந்த உரிமைகளை மீட்பது, புதிதாக எதையும் இழக்காமல் பாதுகாப்பது, இன்றைய இளைஞர்களுக்கு கல்வி மற்றும் சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நமது பிரதிநிதித்துவத்தை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துவது கடைசியாக அல்லாஹ் நாடினால் அதிகாரம் பெறுவது.

 

மேலும் அடக்குமுறைக்கு எதிராக ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள் அல்லது பாதிக்கப்பட்வர்களுக்காக என்ற பெயரில் எடுக்கும் முடிவுகள் பெரிய விளைவை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக இருக்கிறதே தவிர நிதானமான நடவடிக்கைகளாக இல்லை. அப்படி ஏதாவது நடந்துவிட்டால் அதைக் காரணம் காட்டியே முஸ்லீம் விரோதப் போக்குடையவர்கள் வளர்ச்சி காணத் துடிக்கின்றனர், அது போல் வளர்ச்சியும் கண்டுள்ளனர். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது RSS ஐயோ அல்லது இந்து முன்னனியையோ யாருக்கும் தெறியாது அதற்குப்பின் கடந்த 18 ஆண்டுகளில் அவர்களின் வளர்ச்சி பட்டி தொட்டிக்கெல்லாம் சென்றுள்ளது என்றால் அதற்கு இதுபோன்ற அசம்பாவிதங்களும் ஒரு காரணம். காஷ்மீர் பிரச்சனையும் தீவிரவாத நடவடிக்கைகளுமே இன்று சங்பரிவாரங்களின் வளர்ச்சியின் ஊற்றுக்கண்கள். இதை விக்கீலீக்ஸ் இணையதளமும் அம்பலப்படுத்தியிருந்தது. நாம் ஏதாவது ஒரு வகையில் தவறு செய்துவிட வேண்டும் என்பதே முஸ்லிம் விரோதப்போக்குடையவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்காக பல்வேறு முயற்சிகள் செய்து நம்மைத் தூண்டுகின்றனர், எதையாவது அவ்வப்போது அறிக்கைகளாக விடுகின்றனர், முஸ்லீம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். எப்படியாவது கரையை கடந்துவிட துடிக்கும் நாம் எதிரியின் வலையில் மாட்டிக்கொண்டால் எப்படி கடலைக் கடப்பது. ஆனால் முன்பைவிட முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் மதரீதியான கலவரங்களும் தாக்குதல்களும் சற்று குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். அனைத்து தரப்பு மக்களாளும் முஸ்லிம் விரோதப்போக்குடையவர்கள் ஓரளவுக்கு அடையாளம் காணப்பட்டுவிட்டனர்.

 

தேவையான நடவடிக்கைகள்

கல்வி, இன்று முன்னேறிய நாடுகளையும், சமுதாயங்களையம் வழிநடத்தியது கல்வியாகத்தான் இருந்திருக்கிறது. நம் சமுதாயத்தை அறிவுள்ள சமுதாயமாக மாற்றவேண்டும். அதற்கு சமமாக இஸ்லாமிய அறிவும் பெற்றிருக்கும் வண்ணம் கல்வியில் தேவையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

 

இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் கைவிட வேண்டும். அதற்கு இயக்க பாகுபாடின்றி களமிறங்க வேண்டும். பெரும்பாலான மூட நம்பிக்கைகள் பல இயங்களின் சமரசப் போக்குகளால் மக்களிடையே அதிகரித்தவண்ணம் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. மறுமையை நோக்கமாகக் கொண்ட சமுதாயத்தையும் சமுதாய தலைவர்களையும் கொண்டு இயங்கினால்தான் வெற்றிபெற முடியும்.

 

இந்தியா மற்றும் உலகலாவிய அளவில் பத்திரிக்கைகள் மூலமோ தொலைக்காட்சிகள் மூலமோ அல்லது இணையதளங்கள் மூலமோ மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும். 1947ல் கொள்ளப்பட்ட காந்தியுடைய வரலாற்றையே திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள் என்றால் அதற்கு முந்தைய வரலாறுகள் எப்படி மக்களுக்குத் தெறியும்.

 

முஸ்லீம்கள் பெரும்பாலும் அவர்களை சுற்றியே இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. முஸ்லீம்கள் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பொது நீரோட்டத்தில் அங்கம் வகிப்பவர்களாக இல்லை. தமக்கான பிரச்சனைகளை மட்டுமே கொண்டு போராடுபவர்களாக உள்ளனர் என்ற கோணத்தை மாற்றி நாட்டின் ஊழல், மதவாதம் மற்றும் பொதுவான பிரச்சனைகளுக்காக களமிறங்க வேண்டும். காலப்போக்கில் அந்த மாற்றத்தை நாம் அடைந்து கொள்ளலாம். தற்போதைக்கு நம் சமுதாய முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளதால் இந்த நிலை நீடிப்பதில் தவறில்லை.

 

சமுதாய ஒற்றுமை

சமுதாய ஒற்றுமை என்ற கருத்தைப் பொருத்தவரை பல்வேறு தரப்பினரும் இயக்கம் சார்ந்த சாராதவர்களின் ஒருமித்த கருத்தாக ஒரே தலைமை என்ற வாதமாக உள்ளது. இது சாத்தியம் என்றாலும் பரவாயில்லை. தற்போதைக்கு சாத்தியமில்லாதை பேசுவதாலோ அல்லது மேதிக்கொண்டாலே எந்த பயனும் இல்லை. ஒரு பிரச்சனையை முன்வைத்து அதில் ஒன்று படலாம். உதாரணத்திற்கு இட ஒதுக்கீடு என்ற பிரச்சனையை முன்வைத்து சில இயக்கங்கள போராடின, மற்ற இயக்கங்கள் அதை விமர்சனம் செய்ததே தவிர அது ஒரு சமுதாய தேவை என்பதை கருத்திக் கொண்டு களம்காண வில்லை. இயக்கங்கள் பலவாக இருந்தாலும் கோரிக்கைகள் ஒன்றானதாக இருக்க வேண்டும். மேலும் அரசியல் என்று வரும்போதும் இதே நிலையே நீடிப்பதைப் பார்க்கலாம்.

 

சமூகத்தையும் மார்கத்தையும் பிரிக்காமல் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியில் வெற்றியில்லை என்ற அளவுக்கு நம் சமூகம் அவை இரண்டையும் இணைத்துப் பார்ப்பதையே தவிற்கிறது. இரண்டையும் ஒருசேர கொண்டு சென்றுதான் நபிகள் நாயகம் (ஸல்) ஒரு தனி வரலற்றையே படைத்தார்கள். அந்த வழியை தேர்ந்தெடுக்க அனைவரும் தயாராக வேண்டும். உழைக்கவேண்டும் கண்டிப்பாக அல்லாஹ் நாம் நம்பிக்கையோடு நாடுவதை நமக்கு எளிதாக்கித்தரப் போதுமானவன்.

 

அல்ஹம்துலில்லாஹ்….

 

அபூ அஸ்ஃபா

புதுவலசை.இன்