தூத்துக்குடி நாசரேத்தில் மசூதியை இடிக்க முயற்சி - வகுப்புக் கலவரம் ஏற்படும் அபாயம்

30/08/2011 14:48

 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழ‌டைந்து போனது.

இந்நிலையில் அந்த ஊரில் தற்போது வசிக்கும் 6 முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியைப் புனரமைப்பதற்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பாப்புலர் ப்ரன்ட் என்ற இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக பாப்புலர்           ப்ரன்ட் அம்மசூதியை ட்ரஸ்டின் கீழ் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மசூதி புனரமைக்கும் பணியில் ஈடுபடவே அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மசூதி இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடினார். பஞ்சாயத்திடம் அனுமதி கேட்காமல் மசூதி கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அதனை இடிக்க வேண்டும் என பஞ்சாயத்திடம் புகாரும் கொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு இந்து முன்னணி தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது இப்பிரச்சினையை பூதாகரமாக்கவே அப்பகுதியில் வகுப்பு கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. "மசூதியினைப் பஞ்சாயத்து நிர்வாகம் இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்" என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்நேரம்