தேர்தல் மோதலில் இந்திய முஸ்லிம்கள் 25 பேர் சாவு

18/10/2010 17:16

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள ஒராங்கி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நடந்த வன்முறையில், இந்தியாவிலிருந்து சென்று கராச்சியில் குடியேறிய முஸ்லிம்களில் 25 பேர் உள்பட 26 பேர் இறந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

 தேசப் பிரிவினைவியின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்கள் அந் நாட்டில் இன்னமும் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.

 

 பஞ்சாப் மாகாணத்தில் பஞ்சாபியர்களும் சிந்து மாகாணத்தில் சிந்திக்களும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பஷ்டூன் மொழி பேசும் பழங்குடிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்கள் பெரும்பாலும் கராச்சி நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கி உள்ளனர்.

 

 இவர்கள் தங்களுக்கென்று தனி அரசியல் கட்சியை வைத்துக் கொண்டுள்ளனர். முத்தைதா-இ-குவாமி இயக்கம் என்பது அதில் ஒன்று.

 

 கராச்சி நகரில் உள்ள பி.எஸ். 94 என்று அழைக்கப்படும் ஒராங்கி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக முத்தைதா-இ-குவாமி இயக்கத்தின் ராஜா ஹைதர் இருந்தார். இவர் இந்தியாவிலிருந்து சென்று கராச்சியில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது நண்பரைப் பார்க்கச் சென்றபோது அரசியல் எதிரிகளால் ஆகஸ்ட் 2-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

 

 அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முத்தைதா-இ-குவாமி கட்சி மீண்டும் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. அதே சமயம் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் அவாமி தேசிய லீக் என்ற மற்றொருகட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்தன. ஆனால் திடீரென்று அவாமி தேசிய லீக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் பஷ்டூன் இன மக்கள்.

 

 இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாகிஸ்தானிய இன குழுக்கள் இப்போது ஓரணியில் திரண்டுள்ளன. அவற்றின் திடீர் தாக்குதலால் இந்திய வம்சாவழி முஸ்லிம்களில் 25 பேர் கடந்த 2 நாள் வன்முறைச் சம்பவங்களில் இறந்துவிட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

 இந்த எண்ணிக்கையை அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. மருத்துவமனை வட்டாரங்கள், போலீஸôர், தீயணைப்புப் படையினர், அரசியல் கட்சிகள் ஆகியோர் தெரிவிப்பதைக் கூட்டி இந்த எண்ணிக்கை பெறப்பட்டிருக்கிறது. உண்மையில் இறந்தவர் எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது.

 

 மதம் ஒன்றாக இருந்தாலும் இனம் வேறாக இருப்பதால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. அவை பலத்த உயிரிழப்புகளிலும் சொத்து இழப்புகளிலும் முடிவது பெரும் துயரமாக இருக்கிறது.

 

 இந்த இடைத் தேர்தலிலிருந்து விலகுவதாக அவாமி தேசியலீக் கட்சி அறிவித்த பிறகே மோதல்களும் உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் ஏராளமான பஷ்டூன் அகதிகளும் வசித்து வருகின்றனர்.

Dinamani