தொழிலாளர் நல மேம்பாடு: குவைத்-இந்தியா ஒப்பந்தம்

23/08/2010 10:35

வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நல மேம்பாட்டில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவும், குவைத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

இந்தியாவிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடான குவைத்துக்கு வேலை தேடி செல்கின்றனர். இந்நிலையில், இத்தகைய நடைமுறையின் மூலம், நிறுவனங்கள் தொழிலாளர்களை சட்டப்படியும், நேரிய முறையிலும் வேலைக்கு அமர்த்துவது உறுதி செய்யப்படும்.

 

இந்தியாவுக்கான குவைத் தூதர் அஜய் மல்ஹோத்ரா மற்றும் அந்நாட்டு சமூக மற்றும் தொழிலாளர் நல அமைச்சகத்தின் துணை செயலர் முகமத் அல் கன்டாரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

இதன் மூலம், குவைத்தில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் நலத்தில் சீரிய கவனம் செலுத்தப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

முன்னதாக, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நல மேம்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குவைத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

 

அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.