நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 3 மடங்கு சம்பள உயர்வுச் சட்டம் நிறைவேறியது!

27/08/2010 20:12

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியத்தை ரூ.16,000த்திலிருந்து ரூ.50,000 ஆகவும், அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றால் நாளொன்றுக்கு அளிக்கப்படும் தினப்படி ரூ.1,000த்திலிருந்து ரூ.2,000 ஆகவும், இதர படிகளை பன்மடங்கு உயர்த்த வழிவகை செய்யும் சட்ட வரைவு மக்களவையில் நிறைவெறியது.

நாடாளும்ன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் (திருத்த) சட்ட வரைவு 2010 மக்களவை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டப் பிறகு இது சட்டமாகும்.

இச்சட்ட வரைவு நிறைவேற்றத்தின் படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெறும் ஊதியம் மற்றும் படிகள் விவரங்கள் வருமாறு:

1. மாத ஊதியம் - ரூ.50,000.00

2. தினப்படி - ரூ.2,000.00

3. தொகுதிப்படி (ஒரு மாதத்திற்கு) - ரூ.45,000.00

4. அலுவலக செலவுப்படி (மாதத்திற்கு) - ரூ.45,000.00

5. போக்குவரத்து செலவு (ஆண்டிற்கு) - ரூ.4,00,000.00

6. ஓய்வூதியம் (மாதத்திற்கு) - ரூ.20,000.00

மேற்கண்ட கணக்குப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 3 மடங்கும், தினப்படி 2 மடங்கும், தொகுதிப் படி இரண்டரை மடங்கும், அலுவலகப்படி இரண்டரை மடங்கும், போக்குவரத்து செலவுப்படி 4 மடங்கும், ஓய்வூதியம் இரண்டரை மடங்கும் எந்த வித எதிர்ப்போ சிக்கலோ இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த உயர்வு அனைத்தும் மே மாதம் முதல் நடைமுறைபடுத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளார். எனவே அனைவருக்கும் 3 மாத பாக்கித் தொகையாக பெரும் தொகை கிடைக்கும். இதனால் மட்டும் நாட்டிற்கு ரூ.118 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், படிகள் உள்ளிட்ட சலுகைகள் குறித்து ஆராய சுதந்திரமான தனித்த அமைப்பு வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்துள்ளது.
இதனை எதிர்த்த ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான உரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்தியாவின் அரசமைப்பு வழங்கியுள்ளது என்று கூறினார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை தங்களின் நடவடிக்கையின் மூலம் தள்ளிவைக்கும் உறுப்பினர்களின் தினப்படியை தரக்கூடாது என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சை நிருப்பம் கூறினார்.