நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது? ஆய்வு நடத்த மத்திய அரசு திட்டம்

29/11/2010 15:14

 

நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு

நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்று கடந்த 1985-ம் ஆண்டு, முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. அப்போது, ரூ.31 ஆயிரத்து 584 கோடி முதல் ரூ.36 ஆயிரத்து 786 கோடி வரை கருப்பு பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது, அப்போதைய இந்திய பொருளாதாரத்தில் 16.53 சதவீதம் ஆகும்.

அதன் பிறகு, பொருளாதாரம் 31 மடங்கு அதிகரித்து விட்டது. எனவே, தற்போதைய நிலையில் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்று அறிய மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக ஆய்வு நடத்த உத்தேசித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி

அதையொட்டி, இந்த ஆய்வு நடத்துவது தொடர்பாக, 4 நிறுவனங்களிடம் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி யோசனை கேட்டுள்ளார். நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி, இந்திய புள்ளியியல் நிறுவனம், நேஷனல் கவுன்சில் பார் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச், நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஆகிய 4 நிறுவனங்களும் இம் மாத இறுதிக்குள் தங்களது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வு குறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன், மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரிகள் வாரியம், அமலாக்க இயக்குனரகம், பொருளாதார விவகாரத்துறை, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகளும், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மந்திரிசபை செயலகம், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த ஆய்வில் ஈடுபடுவார்கள்.

கருப்பு பணம் எவ்வளவு என்பதுடன், அது எப்படி வந்தது, அது, உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ அன்னிய செலாவணி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு நடத்தப்படும்.

வெளி நாடுகளில் பதுக்கல்

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றியும் ஆய்வு செய்யப்படும். அப்பணம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா? என்றும் ஆய்வு செய்யப்படும். கருப்பு பணம் சம்பாதிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பற்றியும், அவை வெள்ளை பணமாக மாற்றப்படும் வழிமுறைகள் பற்றியும் ஆய்வு நடத்தப்படும். கருப்பு பணத்தை கண்டறிந்து, அவற்றுக்கு வரி விதிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆய்வு நடத்துமாறு கேட்டுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். dailythanthi.com