நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்

28/07/2011 09:19

புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 

தன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.

inneram.com