நியூயார்க் நகரில் மசூதி கட்ட நினைப்பவருக்கு கொலை மிரட்டல்!

05/10/2010 15:29

நியூயார்க் நகரில் மசூதி கட்டுவதற்கு நியூயார்க் நகரவாசிகளில் பெரும்பாலானவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தின் தந்தை என்று கூறப்படும் இமாம் ஃபைசல் அப்துல் ரெளஃப், அவருடைய மனைவி டெய்சிகான் ரெளஃப் ஆகியோருக்கு அன்றாடம் தொலைபேசிகளிலும் இணையதளம் வழியாகவும் கொலை மிரட்டல்கள் குவிந்துகொண்டேயிருக்கின்றன.

இடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய மையத்தையும் மசூதியையும் கட்ட ஏற்பாட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர். ஆனால் எதிர்ப்பாளர்களோ மசூதியே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்கும் வகையில் பெரிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது.

பல அடுக்கு மாடி கட்டடமாக உருவெடுக்கவுள்ள இதன் ஒரு தளத்தில் இஸ்லாமிய மையமும் மற்றொன்றில் தொழுகை செய்யும் வசதிகளோடு மிகப்பெரிய மசூதியும் கட்டப்படும் என்று கான் தெரிவிக்கிறார்.

இந்த கட்டடத்தில் உடல் பயிற்சி மையம், நீச்சல் குளம், குழந்தைகளைப் பராமரிக்கும் பிரிவு, சமையல் பள்ளி, கலை அரங்கம் ஆகியவையும் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி