நீதிபதி குழு அறிக்கையில் குழப்பம்: புதிதாக கட்டணத்தை நிர்ணயிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

24/10/2010 17:07

நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கையில் குழப்பங்கள் இருப்பதால், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் சென்னையில் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியது:

 

 நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டண விகிதத்தை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை பார்த்தால் கட்டணங்களை சரியான முறையில் நிர்ணயிக்கவில்லை என்பது தெரியவருகிறது.

 

 மொத்தம் 955 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் படி, தமிழகம் முழுவதும் 7 பள்ளிகளுக்கு பத்து ரூபாய் ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 39 பள்ளிகளுக்கு  25 ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 மாநிலம் முழுவதும் மொத்தம் 188 பள்ளிகளுக்கு ஆண்டுக் கட்டணம்  100 அல்லது அதற்குக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

 சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள 540 பள்ளிகளுக்கு ஒரே கட்டண விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல், நீதிபதி குழுவின் அறிக்கையில் நிறைய குழப்பங்கள் உள்ளன.

 

 உயர் நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தால், தீர்ப்பு வேறுவிதமாக இருந்திருக்கும். பள்ளியின் செலவினங்களை முழுமையாகக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

 

 சாதாரண பள்ளிகளுக்கு மிகக் குறைவாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் பள்ளிகளை நடத்த முடியாது. தனியார் பள்ளிகளின் மேல்முறையீட்டிலும் சரியான கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை.

 

 எனவே, இந்தக் குழுவை மாற்றியமைக்க வேண்டும். அனைத்துச் செலவினங்களையும் கருத்தில் கொண்டு புதிதாக ஆய்வு செய்து கட்டண விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும்.

 

 கடந்த 2002-ல் தனியார் பள்ளிகளுக்கு சிட்டிபாபு குழு கட்டண நிர்ணயம் செய்தது. இந்தக் குழு நகரம், பேரூராட்சி, கிராம ஊராட்சி என்று வகைப்படுத்தி, அனைத்து செலவினங்களையும் கருத்தில் கொண்டு கட்டணம் நிர்ணயித்திருந்தது.

 

 அந்தக் கட்டணத்தை இப்போதைக்கு ஏற்றவாறு மாற்றி அமல்படுத்தலாம் என்றார் அவர்.