நீதிபதிகளின் ”கீப்” (வைப்பாட்டி) என்ற வார்த்தைக்கு பெண் வக்கீல் ஆட்சேபணை

25/10/2010 21:53

திருமண பந்தத்துக்கு உட்படாமல், சேர்ந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரியும்போது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டுமா என்ற வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.

 

இந்திய உச்சநீதிமன்றம்

அப்போது, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் டி.எஸ். தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டது.

அதில், திருமணம் செய்துகொள்ளாமல், ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருக்கும் நிலையில், அந்த பெண்ணை, 'கீப்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதே நீதிபதிகள் முன்பு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அப்போது, வியாழக்கிழமை தீர்ப்பின்போது, திருமணமாகாமல், ஓர் ஆணுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணை, வைப்பாட்டி என்று பொருள்படக்கூடிய, 'கீப்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியது கடும் ஆட்சேபத்துக்குரியது என்று இந்திரா ஜெய்சிங் எதிர்ப்புத் தெரிவித்தார்.

 

இந்தியாவின் உச்சநீதிமன்றம், 21-வது நூற்றாண்டில், பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு வார்த்தையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தான் ஒரு ஆணை வைத்திருப்பதாக ஒரு பெண் கூற முடியுமா என்று கேட்டார் இந்திரா ஜெய்சிங்.

 

அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறிய அவர், அந்த நீதிமன்றத்தின் முன் தான் ஆஜராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

 

ஆனால், தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குத் தொடர்பாக மட்டும் பேசுமாறு கூடுதல் சொலிடர் ஜெனரலை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுறுத்தினார்.

 

அப்போது நீதிபதி தாகூர் குறுக்கிட்டு, 'கீப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஆசைநாயகி என்ற பொருள்படும் கான்குபைன் என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று இந்திரா ஜெய்சிங்கிடம் கேட்டார்.

 

தனது ஆட்சேபம், வியாழக்கிழமை தீர்ப்பில் 'கீப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு மட்டும்தான் என்று தெரிவித்தார் இந்திரா ஜெய்சிங்.

 

திருமண பந்தத்துக்கு உட்படாத ஆணும் பெண்ணும் பிரியும்போது, அவர்கள் இருவரும் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்திருந்தால்தான், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. (தீர்ப்பு புறிகிறதா? என்ன நெறிமுறை என்று நீதிபதி சொல்ல வில்லையே)

www.bbctamil.com