நெல்லையில் மமமுக கரசேவை போராட்டத்தால் பதற்றம்

24/07/2011 16:45

 

ஆக்ரமிக்கப்பட்ட மசூதியின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தித் தடையை மீறி கரசேவையில் ஈடுபட்ட மனித நேய மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, பேட்டை செக்கடி பகுதியில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான நவாப் வாலாஜா மசூதி உள்ளது. இந்த மசூதியின் சொத்துக்களைத் தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மதிப்புள்ள இந்தச் சொத்துக்களை மீட்டு வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளது.

மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஜூலை 24ல் அக்கட்சியின் தலைவர் பாளை ரபீக் தலைமையில் கரசேவை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தடை மீறி கரசேவைக்காக பேட்டை நோக்கி வந்தனர். டவுண் காட்சி மண்டபம் அருகே வந்தபோது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்ததும் கமிஷனர் வரதராஜூ, ஆர்டிஓ ராஜகிருபாகரன் ஆகியோர் அங்கு வந்து மமமுக தலைவர் பாளை ரபீக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "பிரச்னைக்குரிய இடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுக்குப் பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும்" என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

இதற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மோசடி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை என்று ரபீக் கூறினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திடீரென அவர்கள் கரசேவையில் ஈடுபட முயன்றனர். உடனே காவல்துறையினர் ரபீக் மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் சுமார் 300 பேரைக் கைது செய்தனர். அப்போது கைதானவர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.

கைதான அனைவரையும் ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்து வைத்திருந்தனர்.

இச்சம்பவத்தால் பேட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான காவலர் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

கரசேவை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பேட்டை அறிவு திருக்கோயிலிலிருந்து அரசு ஐடிஐ வரை காவலர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பேட்டையில் பதற்றமான பகுதிகளிலும் ஆயுதப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் பேட்டை மசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட பேட்டை நவாப் வாலாஜா மசூதி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

inneram.com