நேட்டோவின் தாக்குதல்களில் 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் பலி லிபிய அரசாங்கம் குற்றச்சாட்டு

02/06/2011 14:58

திரிபோலி:  லிபியாவில் கடந்த மார்ச்சிலிருந்து இடம்பெற்று வரும் நேட்டோவின் வான் தாக்குதல்களில் 700 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக லிபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் மூசா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமது தாக்குதல்களில் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள நேட்டோ ,கடாபியிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றது.  திரிபோலியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நேட்டோ நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இப்ராஹிம்;,

கடந்த மார்ச் 19 தொடக்கம் மே 26 வரையிலான காலப்பகுதியில் பொதுமக்கள் உள்ளிட்ட 718 பேர் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 4067 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 433 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்குள் இராணுவ உயிரிழப்புகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்களின் பேரிழப்புக்கான சாட்சியங்கள் எதனையும் திரிபோலியிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் வெளியிடவில்லை. எதற்காக? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள இப்ராஹிம்;, இது தலைநகரைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெற்ற உயிரிழப்புகளை மட்டும் உள்ளடக்கவில்லை.நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை உள்ளடக்கியுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பில் லிபியத் தலைவர் கடாபியின் வெளியேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதா எனக் கேட்கப்பட்டபோது;  கடாபி வெளியேறினால் பாதுகாப்பு முறைமைகள் காணாமல் போகும். அவரது வெளியேற்றம் லிபியாவில் மிக மோசமான நிலைமையை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ளனர்.
thinakkural.com