நோர்வே இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 92ஆக உயர்வு

24/07/2011 10:53

நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர்.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே நேற்று முன்தினம் திடீரென குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் பலியாயினர்.

 

பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் எண்ணெய் அமைச்சக அலுவலகங்களும் குண்டு வெடிப்பில் பலத்த சேதம் அடைந்தன. அப்பகுதியில் உள்ள பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றின் கட்டடமும் சேதமானது.

 

இச்சம்பவத்தின் போது பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் அலுவலகத்தில் இல்லாததால் உயிர் பிழைத்தார். கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளால் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என யூகங்கள் கிளம்பியுள்ளன.

 

இந்நிலையில் நோர்வே நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய ஏரியான டைரிப்ஜோர்டனின் நடுவில் அமைந்துள்ள உடோயா தீவில் ஆளும் தொழிலாளர் கட்சி இளைஞர் அணியினரின் கோடைப் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு பொலிஸ் உடையில் வந்த நபர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை வட்டமாக நிற்கச் சொன்னார். பின் அவர்களை குருவியை சுடுவது போலச் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்.

இதைப் பார்த்து மிரண்டு போன மற்றவர்கள் அருகில் இருந்த ஏரித் தண்ணீருக்குள் குதிக்க ஆரம்பித்தனர். சிலர் அங்கிருந்த புதர்கள் மற்றும் மரங்களுக்குப் பின்னால் ஓடி ஒளிந்தனர்.

 

பொலிஸ் உடையில் வந்த அந்த நபர் தண்ணீருக்குள் ஒளிய முயன்றவர்களை நோக்கியும்வெறித் தனமாகச் சுட்டார். இச்சம்பவத்தில் பலர் பலியாகினர்.

 

குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை 91 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்தில் தான் தீவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன அடையாளத்தின் பேரில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(32) என்ற நோர்வே இளைஞரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஓஸ்லோ நகரில் உள்ள அவரது வீட்டையும் பொலிசார் நேற்று சோதனையிட்டனர். ப்ரீவிக்கிடம் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் ஒரு வெடிக்காத குண்டும் கண்டெடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ப்ரீவிக் குறித்து நோர்வேயின் என்.ஆர்.கே செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ப்ரீவிக் வலதுசாரி பயங்கரவாதி. அவர் தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவல்களைப் பார்க்கும் போது இது உறுதிப்படுகிறது.

 

அவர் சட்டப்படி வாங்கிய உரிமத்தின் பேரில் பல ஆயுதங்களை வைத்திருக்கிறார். சொந்தமாக அவருக்கு காய்கறிப் பண்ணை உள்ளது. குண்டுகள் தயாரிக்க அவருக்கு உரம் விற்பனை செய்யும் கம்பெனி உதவியிருக்கக் கூடும்.

 

ஆனால் நோர்வேயில் உள்ள பல சிறிய வலதுசாரி பயங்கரவாத இயக்கங்களுடன் அவருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. சில சிறிய குற்றங்கள் தவிர பெரிய குற்றங்கள் எதுவும், அவர் மீது இதுவரை பதிவாகவில்லை. எனினும் புதிய நாஜி அமைப்பைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு நோர்வே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

புதிய நாஜி அமைப்பு 1990களில் ஸ்கேண்டிநேவியாவில் தொடர் கொள்ளைகள், கொலைகளில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. தற்போது இது செயலிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newsonews.com