பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நீதிபதி தினகரன் வழக்கு

27/04/2011 10:33

தன்னை நீதிபதி பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைககளுக்குத் தடை விதிக்கக் கோரி சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் தினகரன். இவர் மீது பெருமளவில் ஊழல் புகார்கள் எழுந்தன. அதிகார துஷ்பிரயோகம், நிலக் குவிப்பு, நில ஆக்கிரமிப்பு என புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை ராஜ்யசபாவில் எம்.பிகக்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இதைத் தடை செய்யுமாறு கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் தினகரன்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், என் மீதான புகார்கள் குறித்து ராஜ்யசபா தலைவர் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது. என்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் இவை.

இந்த நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என்று ராஜ்யசபா குழுவுக்கு நான் விடுத்த வேண்டுகோளை அது நிராகரித்து விட்டது. எனவே என் மீதான விசாரணை பாரபட்சமாகவே இருக்கும் என்பது தெளிவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தலைவர் நியமித்த குழுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலம் தலைவராக இருக்கிறார். மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மற்றும் பி.பி. ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.