பனைக்குளம் கடற்கரைக்கு படகில் வந்து தப்பிச் சென்றோர் விடுதலைப் புலிகளா? கியூ பிரிவுப் பொலிஸார் விசாரணை

03/08/2010 16:32

 

3-8-2010

இராமநாதபுரம் அருகே பனைக்குளம் கடற்கரைக்கு வந்து சென்ற இலங்கைப்படகில் புலிகள் இயக்கத்தினர் வந்தார்களா என கியூ பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நடக்கும் பிரச்சினையால் தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிக்கிறது. அகதிகளாக வருபவர்களில் சிலர் மீண்டும் இலங்கைக்குத் தப்பிச் செல்கின்றனர். இவர்களை ஏற்றிச் செல்லும் இலங்கைப் படகோட்டிகள் மற்றும் அகதிகள் பிடிபட்டாலும் இது போன்ற நிலை இன்னமும் தொடர்கிறது. மேலும் இராமேஸ்வரம் பகுதியில் பொலிஸார் ரோந்து அதிகமாக இருப்பதால் தற்போது பனைக்குளம் பகுதிக்கு இலங்கைப் படகுகள் அடிக்கடி வந்து செல்கின்றது. நேற்றுமுந்தினமிரவும் இலங்கைப் படகொன்று வந்துள்ளது. அதில் வவுனியாவைச் சேர்ந்த விஜயா என்ற பெண் அகதியாக வந்ததாகவும் இவருடன் படகில் வந்த சிலர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனைக்குளம் வந்து திரும்பிய படகில் பீடி பண்டல்களுடன் மூன்று அகதிகளும் இலங்கைக்குச் சென்றுள்ளனர். படகில் வந்து தப்பிச் சென்றவர்கள் புலிகள் இயக்கத்தினரா என கியூ பிரிவு மற்றும் உளவுத்துறையினர் அகதியாக வந்த விஜயாவிடம் விசாரித்து வருகின்றனர்.