பள்ளியில் அதிக கட்டணவசூல், கண்டித்ததால் முஸ்லிம் மாணவி கடத்தல் - தாய் பரபரப்பு புகார்

13/10/2010 15:27

 ஆழ்வார்திருநகரில் உள்ள சாதிக்பாட்சா நகரை சேர்ந்தவர் ஷேக்ஹமீது. இவரது மனைவி ஹாஜிதா. இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 
 
அதிக கல்வி கட்டணம் வசூலித்ததை கண்டித்ததால் மாணவி கடத்தல்?  பள்ளி நிர்வாகம் மீது தாய் பரபரப்பு புகார்எனது மகள் ருக்ஷார் (10) ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 11-ந்தேதி காலை அவளை எனது கணவர் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
 
அங்கு வாசலில் இறக்கி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் பள்ளிக்குள் சென்ற அவளை யாரோ ஒருவர் கர்ச்சிப்பால் வாயை பொத்தி கடத்தி சென்றனர். சிறிது நேரம் கழித்து அவள் கோவளத்தில் நின்ற ஒரு பஸ்சில் மயங்கிய நிலையில் உட்கார்ந்திருந்தாள்.
 
அவளை பஸ் கண்டக்டர் எழுப்பி விட்டு விவரம் கேட்டபோது தன்னை யாரோ கடத்தி வந்ததாக கூறி இருக்கிறாள். இதைத் தொடர்ந்து அவள் கொடுத்த தகவலின் பேரில் எனது கணவர் நேரில் சென்று மகள் ருக்ஷாரை மீட்டு வந்தார்.
 
இதுகுறித்து விருகம் பாக்கம் போலீசில் புகார் செய்து இருக்கிறேன். இதற்கிடையே அதிககட்டணம் வசூலிப்பதாக எனது மகள் படிக்கும் பள்ளிக்கு எதிராக கடந்த 8-ந்தேதி பெற்றோர்களின் போராட்டம் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.
 
இதற்காக என்னை தொலைத்து விடுவேன் என பள்ளி நிர்வாகிகள் மிரட்டினர். அதிககட்டணம் வசூலிப்பதை தட்டிக் கேட்டதால் பள்ளி நிர்வாகத்தினரே எனது மகளை ஆள்வைத்து கடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்திதகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி ருக்ஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது என்னை ஒரு ஆன்ட்டி (பெண்) கர்ச்சீப்பால் வாயை பொத்தினார். அதன்பிறகு நான் மயங்கி விட்டேன். என்ன நடந்தது என தெரியவில்லை. கண் விழித்து பார்த்தபோது கோவளத்தில் பஸ்சில் லேசான மயக்கத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
 
கண்டக்டர் பார்த்து என்னை எழுப்பினார். அவரிடம் நடந்த விவரத்தை கூறினேன். என் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் என்னை அழைத்து சென்றார் என்று தெரிவித்தாள்.

Maalaimalar