பாகிஸ்தானில் சிஐஏ நடவடிக்கைகள் நிறுத்தப்படாது: அமெரிக்கா

16/04/2011 18:30

பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாதியிலேயே நிறுத்தும் திட்டமில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதை அந்நாடு கடுமையாக விமர்சித்து வருகிறது. பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அகமது பாஷாவுடன் வாஷிங்டனில் சிஐஏ தலைவர் திங்கட்கிழமையன்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

 

அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துமாறும், சிஐஏ உளவாளிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறும் அப்போது அவரிடம் பாஷா கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் அமெரிக்கா மீதான தாக்குதல்களை தடுப்பதுதான் தனது பணி என அவர்களிடம் சிஐஏ தலைவர் லியான் பனீட்டா தெரிவித்தார்.அமெரிக்க மக்களைக் காப்பதுதான் தனது அடிப்படைப் பொறுப்பு. அதற்கு ஆதரவாக உள்ள சிஐஏவின் செயல்பாடுகளை நிறுத்த முடியாது என பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பனீட்டா தெளிவாகத் தெரிவித்து விட்டதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

சிஐஏ தலைவரின் கருத்தைத் தொடர்ந்து புதன்கிழமையன்று பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகமும், பிரதமர் யூசுப் ரஸா கிலானியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

தினமணி