பாகிஸ்தான் அணு ஆயுதத்தை சோதித்தால் அதனை அழிப்போம்: மொரார்ஜி தேசாய்

22/12/2010 15:35

பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த முற்பட்டால் அதனை அழிக்கும் நடவடிக்கை எடுப்பேன் என்று இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரிட‌ம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள பழைய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. 

1979ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். அப்போது இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராக இருந்தவர் ராபர்ட் எஃப் கோஹீன். பாகிஸ்தான் அப்போது நடத்த திட்டமிட்டிருந்த அணு ஆயுத சோதனை குறித்து இந்தியப் பிரதமரின் கருத்தை அறிந்து தெரியப்படுத்துமாறு அவரிடம் அமெரிக்க அரசு கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராபர்ட் கோஹீன் பிரதமர் மொரார்ஜி தேசாயை ‘அதிகாரப்பூர்வமற்ற, உறுதி எதுவும் அளிக்காத வகையில் விளக்கும்’ வகையில் சந்தித்ததாக அந்த ஆவணம் கூறுகிறது.

பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துவது குறித்து பிரதமர் மொரார்ஜி தேசாயிடன் ராபர்ட் கோஹீன் கருத்து கேட்டதற்கு, “பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த முற்பட்டால், அதனை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தானிற்கு எதிராக போர் ஏற்படும் நிலையில், அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்றோ அல்லது அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்றோ எந்த உறுதி மொழியையும் அளிக்க மொரார்சி தேசாய் மறுத்துவிட்டதாக ராபர்ட் கோஹீன் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்படாத ஆவணங்களை (non - classified documents) அமெரிக்க அரசு வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட 55 ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.

webdunia.com