பாக் அணுப் பாதுகாப்பு கவலைகள்

02/12/2010 21:18

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் உலகளவில் தொடர்ந்து பரபரப்புகளையும் கவலைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

 

தற்போது அந்த இணையதளத்தில் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆண்டு இஸ்லாமாபாதில் இருக்கும் அமெரிக்கத் தூதரான ஆன் பேட்டர்ஸன், அங்குள்ள ஆயுததாரிகள் அணு குண்டு ஒன்றை திருடிவிடுவார்கள் என்கிற பயத்தை விட, அணு ஆலையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் முறையான வகையில் தயாரிக்கப்படாத ஒரு அணு குண்டை தயாரிக்க தேவையான அணுப் பொருட்களை அந்த ஆலையிலிருந்து வெளியே எடுத்துச் சென்றுவிடுவார் என்கிற கவலை குறித்து தொடர்ந்து கூறி வந்திருந்தார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை கைப்பற்றக் கூடும் என்கிற அச்சம், எந்த அளவுக்கு உள்ளது என்பதையே தற்போது விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் குறித்து ரகசியகமாக அனுப்பப்பட்ட ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில் இஸ்லாமிய ஆயுதாரிகள் அணுகுண்டைத் தயாரிக்க வேண்டிய பொருட்களை களவாடிவிடுவார்கள் என்கிற ஆழ்ந்த கவலை பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளால் வெளியிடப்பட்டிருந்தது சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், தமது நாட்டின் அணுச் சொத்துக்களை முழுமையான கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் கீழ் இருக்கும்படியான பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன என்று பிரிட்டனுக்கான பாகிஸ்தானின் தூதர் வாஜித் ஹஸன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

 

அணுப் பொருட்கள் கடத்தப்படலாம்

 
 

பாகிஸ்தான் தரப்பு இப்படியான கருத்துக்களை வெளியிட்டாலும், அமெரிக்க ராஜதந்திரிகளின் தகவல் பறிமாற்றங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தெட்டத் தெளிவாகவே இருக்கின்றது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து பிரிட்டன் ஆழ்ந்த கவலைகளை கொண்டுள்ளது என்பது தான் அந்தச் செய்தி.

பாகிஸ்தானின் தீவிரவாதிகள் அணு ஆலைகளில் பணிபுரியும் யார் மூலமாவது அங்கிருந்து பொருட்களை சிறிது சிறிதாக கடத்தி வெளியே கொண்டு வந்து அதை வைத்து அணு குண்டை தயாரிக்க முயற்சிக்கலாம் என்கிற அமெரிக்காவின் கவலையை ரஷ்யாவும் பகிர்ந்து கொள்கிறது.

பாகிஸ்தான் குலைந்து போய், அதன் அணு ஆயுதங்கள் ஜிகாதி கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்கிவிடும் என்பது அமெரிக்காவின் அதீத அச்சங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

 

பணத்தால் பிரச்சினைகள் தீராது

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை உதவியாக கொடுத்தாலும், அமெரிக்க ராஜதந்திரிகளின் தகவல் பறிமாற்றங்களில், சில விடயங்களை பணத்தால் வாங்க முடியாது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 
 பணத்தால் மட்டுமே அல் கயீதாவால் ஏற்படும் பிரச்சினைகளையோ அல்லது தாலிபான்கள் பாகிஸ்தானிலிருந்து செயற்படுவதையோ தீர்க்க முடியாது
 
பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர்
பல ஆண்டுகளாக, தங்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்து வந்தாலும், அந்த மறுப்புகளை அமெரிக்க அதிகாரிகள் நம்பவில்லை என்பதை தற்போது கசிந்துள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்கள் காட்டுகின்றன.

அதே நேரம் இந்தியா குறித்து பாகிஸ்தான் கொண்டுள்ள கவலைகளையும் அமெரிக்கா அங்கீகரிக்கிறது. மேலும், தீவிரவாதக் குழுக்களை இந்தியாவுக்கு எதிரான தமது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தானால் பார்க்கப்படுகின்றது எனவும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் அதிகரித்து வரும் செயற்பாடுகளே, தாலிபான்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிராக செயற்படுபவர்களை பாகிஸ்தான் அணைத்துக் கொள்வதற்கு வழி செய்தது எனவும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.