பாபர் மசூதி கமிட்டி தலைவர் முகமது ஹசீம் அன்சாரிக்கு கொலை மிரட்டல் (?)

06/10/2010 16:32

அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ள நிலையில் இதற்கு அமைதியான முறையில் தீர்வு காண முயற்சி நடந்து வருகிறது.
 
அயோத்தி பாபர் மசூதி கமிட்டி தலைவர் முகமது ஹசிம் அன்சாரியும் நிர்மோகி அகாரா அமைப்பின் தலைவர் மகாந்த் ஞானதாசும் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இரு தரப்பு தலைவர்களும் இன்னும் 15 நாட்களில் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
 
இந்த நிலையில் முகமது ஹசீம் அன்சாரிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
நான் மகாந்த் ஞானதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் எனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை ஒழித்து கட்ட போவதாக கூறுகின்றனர்.
 
இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இன்னும் 3 மாத கால அவகாசம் இருக்கிறது. அதற்குள் தீர்வு ஏற்பட வேண்டும்.
 
ஆனால் சன்னி வக்பு வாரிய தலைவர் ஜிலானி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எனக்கு எதிராக கருத்தை கூறி இருக்கிறார். இது என்னை காயப்படுத்தி உள்ளது. அவர் தனது வார்த்தையை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இனி இந்த பிரச்சினை பற்றி நான் பேசவே மாட்டேன்.
 
அதே நேரத்தில் இந்து சகோதரர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இனி மேலும் சண்டை போட்டு கொண்டிருப்பது சரியாக இருக்காது. இதனால் நாட்டுக்கும், சமுதா யத்துக்கும் தான் நஷ்டம். அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்