பாபர் மசூதி நில விவகாரம் - நிர்மோகி அகாராவுடன் அன்சாரி பேச்சுவார்த்தை...

04/10/2010 16:43

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான முகமது ஹாசிம் அன்சாரி இன்று அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் மஹந்த் ஞானதாஸை சந்தித்துப் பேசினார். சன்னி வக்ஃப் வாரியம் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக முகம்மது ஹசிம் (90) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"அயோத்தி நிலப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான காலம் நெருங்கிவிட்டது. பேச்சுவார்த்தை அயோத்தி பகுதிக்குள்ளேயே நடைபெறும். இப்பிரச்னை தொடர்பாக நிர்மோஹி அகாரா அமைப்புடன் மஹந்த் ஞானதாஸ் ஆலோசனை நடத்துவார்" என்றும் அவர் கூறினார்.

எனினும், சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் விவரங்களை வெளியிட மஹந்த் ஞானதாஸ் மறுத்துவிட்டார். இதனிடையே, இப்பேச்சுவார்த்தை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யாப் கிலானி கூறியுள்ளார்.

Inneram