பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வினோதமானது - உச்சநீதிமன்றம்

09/05/2011 23:40

அயோத்தி சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு தரப்பும் கோராத ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பாக எப்படி அளித்தது என்று புரியவில்லை என்று அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் வியப்புத் தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவ்வழக்கில் தொடர்புடைய வாதிகளான மத்திய சுன்னி வக்ஃப் வாரியம், ஜமாய்த் உலேமா ஐ ஹிந்த், அகில் பாரத் ஹிந்து மஹாசபா, நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளும், பகவான் ராம் விராஜ்மான் சார்பில் ஒரு மேல் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீடுகளை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விநோதமானது. அதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாத” என்று கூறி அதற்குத் தடை விதித்தனர்.

அயோத்தியில் இருந்து இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மட்டுமன்றி, மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்திலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அங்கு இப்போது நிலவும் நிலையே, விசாரணை முடியும் வரை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். எனவே, அங்குள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இராமர் சிலைக்கு பூசைகள் நடக்க தடையேதுமில்லை என்ற நிலை தொடரும்.

“சர்ச்சைக்குரிய பகுதியை பிரித்துத் தருமாறு எந்த ஒரு தரப்பும் கோராத நிலையில், தனது தீர்ப்பின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை உயர் நீதிமன்றத் தீர்ப்பு தந்துள்ளது. நிலத்தை பிரித்துத் தருமாறு ஒருவரும் கோரவில்லை. எனவே இத்தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம். இது ஒரு வினோதமானத் தீர்ப்பு. எந்த ஒரு தரப்பும் கோராத நிலையில், நிலப் பிரிவினை செய்வதற்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது. நீதிமன்றம் தன்னிச்சையாக ஏதோ செய்துள்ளது, அது விநோதமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள், “ஒரு கடினமான நிலையை உருவாக்கியுள்ளார்கள். இத்தீர்ப்பு மேலும் பல முறையீடுகளை கொண்டுவந்துவிட்டது” என்று கூறியுள்ளனர்.

இத்தீர்ப்பு ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளது என்றும், ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் ஒரு தவறான நிலையை கூறியுள்ளதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ள வக்ஃப் வாரியமும், ஜமாய்த் உலேமா ஐ ஹிந்து அமைப்பும் கூறியுள்ளன.

webdunia.com