பாபர் மசூதி வழக்கில் 24 - ம் தேதி தீர்ப்பு

09/09/2010 11:04

லக்னெள, செப். 8:சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்மபூமி, பாபர் மசூதி நில வழக்கில், வரும் 24ம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெü கிளை தீர்ப்பு வழங்குகிறது.

 

இந்த தீர்ப்பு எதிரொலியாக அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரச்னை எழ வாய்ப்பு இருப்பதாகவும் வகுப்பு மோதல் மூளக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக 60 ஆண்டுகளாக வழக்கு உள்ளது.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்ததாக எஸ்.யூ.கான், சுதிர் அகர்வால், டி.வி. ஷர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச்  ஜூலை 26ம் தேதி அறிவித்தது.

 

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வெளியாகும் என உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர் புதன்கிழமை வெளியிட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததா? ஆலயத்தை இடித்து மசூதி கட்டப்பட்டதா என்பது உள்ளிட்ட 3 பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்ப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.

 

சர்ச்சைக்குரிய இடம் அரசின் பொறுப்பில் இருந்துவருகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைக்கு பூஜை நடத்துவதற்கான அனுமதிக்குத் தடை உத்தரவு கோரி 1950ம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்பவர் முதலாவது வழக்கை தொடர்ந்தார். அதே ஆண்டில் இதே கோரிக்கைக்காக பரமஹம்ச தாம்சந்திர தாஸ் என்பவர் இரண்டாவது வழக்கு தொடர்ந்தார். இது பிறகு வாபஸ் பெறப்பட்டது.

 

மூன்றாவது வழக்கை 1959ம் ஆண்டில் நிர்மோகி ஆகார் என்பவர் தொடர்ந்தார். அரசு பொறுப்பாளரிடம் இருந்து சர்ச்சைக்குரிய நிலத்தின் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்கும்படி கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.

 

4 வது வழக்கு உத்தரப்பிரதேச சன்னி வக்பு மத்திய வாரியம் மூலம் 1961ல் தொடரப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைதாரராக தங்களை அறிவிக்கக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.

 

இந்நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடியும் அந்த நிலத்தை ஒப்படைக்கக் கோரியும் 1989ல் பகவான் ஸ்ரீராம் லாலா விராஜ்மன் என்பவர் 5வது வழக்கைத் தொடுத்தார்.

 

ஒரு வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் எஞ்சிய 4 வழக்குகள் பைஸபாத் சிவில் நீதிமன்றத்தில் கிடப்பில் இருந்தன. 1989ல் அப்போதைய மாநில அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் எல்லா வழக்குகளும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. வழக்கு தீர்க்கப்படும் வரை இப்போதைய நிலையே தொடரவேண்டும் என 1994ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  2002 ஏப்ரலில் இந்த வழக்கு விசாரணை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெü கிளையில் தொடங்கியது.

 

இந்த வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்பு எதிரொலியாக, வகுப்பு மோதல் மூளக்கூடும் என மத்திய அரசும் மாயாவதி தலைமையிலான மாநில அரசும் அச்சத்தில் உள்ளன. கூடுதல் படைகளை அனுப்பும்படி மாயாவதி மத்திய அரசை கோரியுள்ளார். அயோத்தி, பைசாபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புப்படையினர் விடுப்பில் செல்லக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தீர்ப்பு எதிரொலியாக, உத்தரப் பிரதேசத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பதற்றம் ஏற்படக்கூடியவை என்று சந்தேகிக்கப்படும் இடங்களில் கூடுதல் படைகளை நிறுத்த பரிசீலனை செய்யப்படுகிறது.

 

காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக்குழுவும் வெள்ளிக்கிழமை கூடி இந்த தீர்ப்பால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி விவாதித்தது.

 

அயோத்தியில் 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டது என கூறப்படுகிறது. கோயிலை அடித்து மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான சர்ச்சையையடுத்து 1859ல் அப்போதைய பிரிட்டிஷ் அரசு கோயிலையும் மசூதியையும் பிரிக்கும் வகையில் நடுவில் வேலியை அமைத்தது.

 

சர்ச்சைக்குரிய இடம் மீது இரு தரப்பும் உரிமை கோரி வந்த நிலையில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மசூதியை கர சேவகர்கள் இடித்து தரை மட்டமாக்கினர். இதைத் தொடர்ந்து நடந்த வகுப்பு வன்முறையில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

சர்ச்சைக்குரிய இடத்தை தோண்டி ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் ஆய்வுக்குழு, சர்ச்சைக்குரிய நிலத்தின் அடியில் மிகப்பெரிய கட்டுமானம் இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (இந்த ஆய்வு பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது - புதுவலசை.இன்)

 

சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்தபூமி என ராமஜன்ம பூமி அறக்கட்டளை உரிமை கொண்டாடுகிறது.

Dinamani