பாரதிநகர் அதிரா பானு மற்றும் அவரது இரு குழந்தைகள் உடல்களும் பார்சலாக வாடிப்பட்டி அருகே கண்டெடுப்பு

11/11/2010 21:46

வாடிப்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட 3 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. மது‌ரை மாவட்டம் வாடிப்பட்டி கட்டங்குளம் 4 வழிச்சாலையில் தரைப்பாலம் அடியில் வெள்ளைவேஷ்டியால் கட்டப்பட்டு இருந்த சடலம் ஒன்று கிடந்தது. அங்கிருந்து சரியாக 3 கிலோ மீட்டர் தூரத்தில் இதே போல் மற்றொரு பார்சல்  கிடந்தது. 2 பார்சல்களையும் போலீசார் கைப்பற்றினர். முதல் பார்சலில் ‌35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது. மற்றொரு பார்சலில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன், மற்றும் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் ச‌டலம் இருந்தது. அனைவரும் இறந்து 4 நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சடலங்களை வீசிச்சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அந்த சடலங்கள் ராமநாதபுரம் கேணிக்கரை, பாரதி நகரைச் சேர்ந்த ஆதிரா பானு(27), அவரது குழந்தைகள்  முகமது அஸ்லாம் கனி(7) மற்றும் ஆசியா பானு(5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிரா பானுவின் தாய் சயுபு நிஷா அடையாளம் காட்டினார். ராமநாதபுரத்தில் கடந்த 8ம் தேதி இவர்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இவர்களை யாரேனும் கடத்தி கொலை செய்தனரா என்பது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர்