பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பான் கி மூனிடம் அப்பாஸ் இன்று மனு

23/09/2011 14:49

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி இப்பகுதியின் தலைவர் முகமது அப்பாஸ் ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூனிடம் இன்று மனு அளிக்க உள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க முடியாத நிலையில் உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன.

இதற்கிடையே ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களுடன் ஒபாமா நேற்று பாலஸ்தீனம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும் இதில் சுமுக முடிவு ஏதும் ஏற்படவில்லை.

ஐ.நா.வின் அறிக்கைகளாலோ, தீர்மானத்தாலோ பாலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. தொடர் பேச்சு வார்த்தை மூலம் தான் அங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அமைதி காண குறுக்கு வழி ஏதும் இல்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் இந்த பேச்சுக்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐ.நா சபையில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக 120 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒபாமா பேசி வருகிறார்.

எனவே அனைத்து அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக வெள்ளிகிழமையன்று போராட்டம் நடத்த வேண்டும் என பாலஸ்தீன தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து ஐ.நா.வின் உறுப்பு நாடாக அறிவிக்க வேண்டும் என பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், ஐ.நா பொதுச் செயலரை இன்று சந்தித்து மனு கொடுக்க உள்ளார்.

newsonews.com