பால் வழிக்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு

20/11/2010 18:27

 

எமது விண்மீன் மண்டலத்துக்கு (galaxy) வெளியே முதலாவது கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனை ஒத்த இயல்புகளைக் கொண்ட இந்தக் கோள் குறும் விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒரு சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது குறித்த தகவல் சயன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிலியில் உள்ள தொலைநோக்கியூடாக இது அவதானிக்கப்பட்டுள்ளது.


இக்கோள் சுற்றிவரும் சூரியன் எச்ஐபி 13044 (HIP 13044) எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அதன் கோளிற்கு எச்ஐபி 13044பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 2000 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள அதன் சூரியன் தனது வாழ்நாள் காலத்தின் கடைசிக் கட்டத்தில் உள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


வெவ்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன் இதுவரை கிட்டத்தட்ட 500 கோள்கள் எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எமது பால் வழியைச் சேர்ந்தவையாகும். ஆனாலும் இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோள் ஒரு குறும் விண்மீன் மண்டலமாக இருந்த ஒரு விண்மீன்களின் கூட்டத்தைச் சேர்ந்த எச்ஐபி 13044 என்ற சூரியனைச் சுற்றி வரும் கோள் ஆகும்.


இந்த விண்மீன் கூட்டம் 6 முதல் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எமது பால் வழியால் உள்வாங்கப்பட்டதொன்றாகும்.


புதிய கோள் வியாழனை விட 1.25 மடங்கு திணிவைக் கொண்டுள்ளதாகவும், தனது சூரியனை மிகக் கிட்டவாக 16.2 நாட்களில் சுற்றி வருகிறது.


செருமனியின் மாக்ஸ் பிளாங்க் வானியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ரைனர் கிளமெண்ட் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ta.wikinews.org