பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

07/09/2010 11:29

ஒலியை விட சுமார் 3 மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லும் பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஏவுகணையை, பாதுகாப்பு படையினர் சோதித்து பார்த்தனர்.

இந்தியாவின் பாதுகாப்புக்காக பல்வேறு வடிவிலான ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் ஏவுகணைகள் அனைத்தும் தகுந்த சோதனைகளுக்கு பிறகு, ராணுவத்தில் சேர்க்கப்படும். இதற்கான பணிகளில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆணையம் மேற்கொள்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில் (ஐ.டி.ஆர்.) பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று நடந்தது. மூன்றாவது சோதனை வளாகத்தில் இருந்து காலை 11.35 மணி அளவில் ஏவுகணை செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை தாக்கியதால் சோதனை வெற்றி பெற்றது. இது, இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை என்றும் முழு அளவில் சோதனை வெற்றி பெற்றுள்ளது என்றும் ஐ.டி.ஆர். இயக்குனர் எஸ்.பி.தாஸ் தெரிவித்தார்.

BrahMos tested in steep-dive mode - India News Headlines in Tamilஒலியை விட, சுமார் 3 மடங்கு (2.8 மடங்கு) வேகத்தில் செல்லும் பிரமோஸ் ஏவுகணை, 290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை சரியாக தாக்கி அழித்தது. போர் முனைகளில் 300 கிலோ எடையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது. ரஷ்யாவுடன் இணைந்து கூட்டாக தயாரிக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரையில் உள்ள நடமாடும் ஏவுதளங்கள் போன்றவற்றில் இருந்து செலுத்த முடியும். இந்திய கடற்படையில் உள்ள கப்பல்களில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிரமோஸ் ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை, பிரமோஸ்-2 என அழைக்கப்படுகிறது. தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் உடையது. அந்த தாக்குதலின்போது, அருகில் எந்தவித சேதத்தையும் விளைவிக்காமல் இருப்பது, இந்த ஏவுகணையின் சிறப்பு அம்சம்.

இதற்கிடையே, ஒலியை விட 5 மடங்கு அதிக வேகம் கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க உள்ளது. வருகிற டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் இந்தியா வருகிறார். இந்தியா-ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வரும்போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஹைபர் சோனிக் ஏவுகணைகள், மணிக்கு 6 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை ஆகும். அதாவது, பிரமோஸ் ஏவுகணையை விட இரண்டு மடங்கு அதிக வேகம் கொண்டவை. முதல் கட்டமாக, 290 கி.மீ. தொலைவு வரை செல்லும் திறன் கொண்ட ஹைபர் சோனிக் ரக ஏவுகணைகள் தயாரிக்கப்படும். ரஷ்யாவின் உதவியோடு தயாராகும் அந்த வகை ஏவுகணைகள், 2016-ம் ஆண்டுக்குள் உருவாகும்.

டிசம்பர் 21-ந் தேதி முதல் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் ரஷ்ய அதிபர் மெத்வதேவ், தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தையும் பார்வையிட இருக்கிறார். ரஷ்யா உதவியோடு, ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணுஉலை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல், அந்த அணுஉலைக்கான பணிகளை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செய்து வருகின்றன. நீண்ட காலதாமதத்துக்கு பிறகு, மெத்வதேவ் வருகையின் போது அந்த அணுஉலை (முதலாவது உலை) செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 4 அணுஉலைகள், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹரிபுரில் ஒரு அணுஉலை என பல்வேறு அணுஉலைகளை இந்தியாவில் ரஷ்யா அமைக்கவிருக்கிறது.

Koodal