பி.இ, எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் திங்கள் முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது

18/05/2011 09:36

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) பி.இ., எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
 

பிளஸ் 2 தேர்வில் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு உரிய முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால் இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய "கட்-ஆஃப்" மதிப்பெண் அதிகரித்துள்ளது.
 

 பி.இ. படிப்பைப் பொருத்தவரை "கட்-ஆஃப்' மதிப்பெண் 198-க்கு மேல் எடுத்தவர்களுக்கே சிறந்த கல்லூரிகளில், தாங்கள் விரும்பும் பொறியியல் படிப்புப் பிரிவுகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

 எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான "கட்-ஆஃப்' மதிப்பெண் 199.25 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 

 விடுமுறை இன்றி பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: தமிழகத்தில் உள்ள 486 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,20,000 பி.இ. இடங்கள் உள்ளன. இதற்காக மொத்தம் 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
 

 சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட 62 மையங்களில் திங்கள்கிழமை (மே 16) முதல், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் விற்கப்படும். தொடர்ந்து மே 31-ம் தேதி வரை சனி, ஞாயிறு விடுமுறை இன்றி விண்ணப்ப விநியோகம் நடைபெறும். கடந்த ஆண்டு மொத்தம் 2.05 லட்சம் மாணவர்கள் பி.இ. படிப்பில் சேர விண்ணப்பம் பெற்றது குறிப்பிடத்தக்கது.  www.annauniv.edu/tnea2011 என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
 

 பி.இ. விண்ணப்பம்-ஜூன் 3 கடைசி நாள்: பி.இ. விண்ணப்பத்தைப் பெற மே 31-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு ஜூன் 3-ம் தேதி மாலை 5.30-க்குள் வந்து சேர வேண்டும்.
 

 ஜூன் மாத இறுதியில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

 18 மருத்துவக் கல்லூரிகளில்: சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர திங்கள்கிழமை (மே 16-காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். தொடர்ந்து சனி-ஞாயிறு விடுமுறை இன்றி விண்ணப்பம் விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. www.tnhealth.org  என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


 எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் - ஜூன் 2 கடைசி நாள்: எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தை ஜூன் 2-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை பெறலாம்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். 


 ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்கும்.

தினமணி