புகார் வரவில்லை- ஸ்பெக்ட்ரம் விவாகாரத்தில் அரசு பதில்

24/11/2010 12:28

 

பதவி விலகிய அமைச்சர் ராசா
தொலைத் தொடர்புத்துறையில் 2ஜி எனப்படு்ம் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்கு அனுப்பிய மனு, தவறான புரிதலுடன் அனுப்பப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமருக்கு தான் எழுதிய கடிதம் தொடர்பாக, இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் பதில் வந்ததாக சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அதையடுத்து, அந்தக் காலதாமதம் குறித்து கடு் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதுதொடர்பாக விரிவான மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.

பிரதமரின் சார்பில், கடந்த சனிக்கிழமை அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதுதொடர்பான விசாரணை நடைபெற்றபோது, பிரதமரின் சார்பில், அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வஹன்வதி ஆஜரானார்.

இன்று வரை, மனுதாரர் சுப்ரமணியன் சுவாமி, நீதிமன்றத்தில் ராசா மீது புகார் செய்யாத நிலையில், எந்த அடிப்படடையில் அவரது கோரிக்கைக்கு அனுமதியளிக்க முடியும் என்று கேட்ட வஹன்வதி, அதனால், அனுமதியளிப்பது என்ற கேள்வியே எழவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அப்படிப்பட்ட ஒரு புகாரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள விரும்புகிறதா இல்லையா என்று நீதிமன்றம் தெரிவித்த பிறகே, அதுதொடர்பாக அனுமதியளிப்பதா இல்லயை என்ற கேள்வியே எழும் என்று அட்டார்னி ஜெனரல் குறிப்பிட்டார்.

புகாரை நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், அதுதொடர்பாக பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் கூறலாம். அந்த அடிப்படையில், அந்த அனுமதியைப் பெற்று வருமாறு நீதிபதி கூறலாம் என்றார் வஹன்வதி.

இந்த இரு அம்சஙகளிலுமே, சுப்ரமணியன் சுவாமியின் மனு தவறான புரிதலுடன் கையாளப்பட்டிருக்கிறது என்று அட்டார்னி ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

அவரது வாதத்தை மறுத்த சுப்ரமணியன் சுவாமி, அமைச்சர் மீது வழக்குத் தொடர பிரதமரிடம் நேரடியாக தான் அனுமதி கோர முடியும் என்று தெரிவித்தார். அதேபோல், ஊழல் தடுப்புச் சட்டப்படி, தான் நீதிமன்றத்துக்குச் செல்லவும் உரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.

bbctamil.com