புகையிலை பயன்படுத்துவோர் பற்றிய ஆய்வரிக்கை 2010 வெளியீடு

20/10/2010 16:54

இந்தியாவில் புகை பிடிப்போரில் வீட்டுக்குத் தெரியாமல் 29 சதவீதம் பேர் புகைபிடிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் புகைபிடிப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

பத்து பேரில் 5 பேர் வீட்டுக்குத் தெரியாமல் புகைபிடிக்கின்றனர். புகையிலை உபயோகிப்பு குறித்த அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டார். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

 

புகையிலை பொருள்களைப் பயன்படுத்துவோரில் 34.6 சதவீதம் பேர் புகையிலையை எதாவது ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 47.9 சதவீதம் பேர் ஆண்கள், 20.3 சதவீதம் பேர் பெண்களாவர்.

 

பெரியவர்களில் 5 சதவீதம் பேர் சிகரெட் உபயோகிக்கின்றனர். இவர்களில் 10.3 சதவீதம் பேர் ஆண்கள். 0.8 சதவீதம் பேர் பெண்கள். பீடி உபயோகிப்போர் சதவீதம் 9.2 ஆகும். இவர்களில் 16 சதவீதம் பேர் ஆண்கள், 1.9 சதவீதம் பேர் பெண்கள்.

 

புகையிலை உபயோகிப்போரில் பெரும்பாலானோர் தாங்கள் உபயோகிக்கும் அளவில் 60 சதவீதத்தை காலையில் எழுந்த அரை மணி நேரத்திற்குள்ளேயே பயன்படுத்தி விடுகின்றனர்.

 

புகையிலைப் பழக்கம் ஏற்படும் சராசரி வயது 17. ஆனால் ஆண்களுக்கு 15 வயதுக்கு முன்பே இந்த பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. 15 வயது முதல் 17 வயதுப்பிரிவினரில் 9 சதவீதத்தினர் புகையிலையே ஏதாவது ஒரு வடிவில் பயன்படுத்துகின்றனர்.

 

புகைபிடிப்பவர்களில் 10 பேரில் 5 பேர் இப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.  சிலர் புகையிலை அல்லாத பொருளை உபயோகிக்கலாம் என்று தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

 

இப்போதைய சூழலில் புகையிலை உற்பத்தியாளர்களின் எதிர்காலம் ஆபத்தான சூழலில் இருப்பதாக நினைத்து அஞ்சத் தேவையில்லை என்று குறிப்பிட்ட குலாம் நபி ஆசாத், இருப்பினும் புகையிலை சார்ந்த பொருள் உற்பத்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.

 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதாகக் கூறி, பொது நலனுக்குக் கேடு விளைவிக்கும் விஷயத்தை நீண்ட காலத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

 

புகையிலை சார்ந்த பொருள் உபயோகத்தைத் தடுப்பதில் ஒவ்வொரு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆசாத் வலியுறுத்தினார். புகையிலைக்கு மாற்று பயிரை கண்டறியுமாறு வேளாண் அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் பணியில் மனித வள மேம்பாடு, தகவல் மற்றும் ஒலிபரப்பு த்துறை, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சகங்கள் ஈடுபட்டுள்ளன.

 

தினமணி 20-10-10