புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவி ஏற்றார்

29/06/2011 17:30

புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவி ஏற்றார்முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றது. தனது அமைச்சரவையில் 33 அமைச்சர்களை ஜெயலலிதா நியமித்தார்.

 
இவர்களில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த மரியம்பிச்சை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனால் அவர் வகித்து வந்த இலாகாக்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டார்.   முகம்மது ஜான் இன்று தமிழக அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் தர்பார் ஹாலில் இன்று காலை 10 மணிக்கு எளிமையான முறையில் நடந்தது.
 
சரியாக 9.55 மணிக்கு கவர்னர் பர்னாலா பதவி ஏற்பு மண்டபத்துக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் சாரங்கி ஆகியோர் வரவேற்றனர். பதவி ஏற்கும் அமைச்சரை கவர்னருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார்.
 
தமிழ்தாய் வாழ்த்துடன் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முகம்மது ஜானுக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் அமைச்சர் முகமது ஜான், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றார். தேசிய கீதம் இசைக்க நிகழ்ச்சி முடிவடைந்தது.  
 
பின்னர் அமைச்சர் முகம்மது ஜான் நிருபர்களிடம் கூறுகையில், முதல் -அமைச்சர் அம்மா எனக்கு இந்த பதவியை தந்து உள்ளார். அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அளித்த பொறுப்பை ஏற்று இருக்கிறேன். அம்மாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தனது கடமையை சிறப்பாக செய்வேன் என்றார்.
 
விழாவில் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, செந்தமிழன், வைத்தியலிங்கம், எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி, சிவபதி, உதயகுமார், பச்சைமால், சண்முகவேல், முனிரத்தினம், தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி, சின்னையா, டாக்டர் விஜய், நத்தம் விசுவநாதன், சுப்பிரமணி, ஜெயபால் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
பாலகங்கா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வளர்மதி, வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், கவர்னர் பர்னாலா மகன் ஜஸ்ஜித் சிங், அமைச்சர் முகமது ஜான் மனைவி ஷாகினா பேகம், மகன் உமர் பரூக், ஆகியோரும் கலந்து கொண்டனர்.  
 
அமைச்சர் முகம்மது ஜானுக்கு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக பதவி ஏற்றுள்ள முகம்மது ஜான் ராணிப்பேட்டையை சேர்ந்தவர்.இவருக்கு வயது 62. பி.எஸ்.சி.,பி.எட்., படித்துள்ளார்.
 
இவர் 2 முறை ராணிப்பேட்டை நகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக வேலூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக பதவி வகித்துள்ளார். தற்போது சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார்.

மாலைமலர்