புதிய குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டை தொடர்பான பிரச்சனைக்கான கலைஞர் உத்தரவு

30/10/2010 19:44

புதிய அட்டைகள் கோரி வந்துள்ள மனுக்களை கூடுதல் பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது அவர், வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக உள்ளனவா என்பதை மேல் அதிகாரிகள் அடிக்கடி தீவிர ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
 
குடும்ப அட்டைகள் தொடர்பாக மேல் முறையீடு செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
 
விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஆய்வு முடியும் வரை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். புதிய அட்டைகள் கோரி வந்துள்ள மனுக்களை கூடுதல் பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை நகரில் நியாய விலைக்கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தகுதியான இடங்களை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள் முதல் செய்யும் போது 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நிலையில் கொள் முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

nakkheeran.com