புது மாப்பிள்ளை ஜஹாங்கீர் சேட் கொலை: 8 பேர் மீது வழக்கு

22/06/2011 14:45

கீழக்கரை அருகே திருமணம் ஆன 3 வது நாளில் புதுமாப்பிள்ளை செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டார்.

 

ராமநாதபுரம் ஜோதி நகரில் குடியிருக்கும் அப்துல்வஹாப் மகன் ஜஹாங்கிர்சேட் (26). இவருக்கும் பெரியபட்டினத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகள் ஜீனத் (23) என்பவருக்கும் 3 நாளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதிகள் இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுவிட்டு பெரியபட்டினத்துக்கு திங்கள்கிழமை திரும்பினர்.<p></p>இதனிடையே ஜஹாங்கிர்சேட் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்று தொலைபேசி மூலம் ஜீனத்துக்குத் தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீனத் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் கணவரின் அக்காள் இஸ்மத்நிசா, சுல்தானியா ஆகியோரை திங்கள்கிழமை இரவு ராமநாதபுரத்தில் இருந்து வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

 

இதனிடையே செவ்வாய்க்கிழமை மாடியில் நின்றபோது ஜஹாங்கிர் சேட் மாடியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.

 

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் பெரோஸ்கான், உருபஸ்கான், சுல்தான், கையும், துர்சியா, மாலியா, சித்தி, ஆரியா ஆகிய 8 பேர் மீது திருப்புல்லாணி காவல் துணை ஆய்வாளர் மணிமாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகிறார்.

dinamani.com