புது வலசை நாடார் தெரு தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பணம்-பொருட்கள் எரிந்து நாசம்

04/08/2010 16:31

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புது வலசை ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் தெருவை சேர்ந்தவர் கேசவன். பனை தொழிலாளியான இவர் பாய்முடையும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி. கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
 
இந்த நிலையில் நேற்று இரவு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மின் கசிவு காரணமாக அவர்கள் வசித்த வீட்டில் தீப்பிடித்தது. அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது.
 
வீட்டுக்குள் வெப்பம் அதிகமானதால் கண் விழித்த கணவன் மனைவி இருவரும் வெளியே ஓடிவந்து உயிர் பிழைத்தனர். தொடர்ந்து எரிந்த தீயில் வீட்டுக்குள் இருந்த ரூ.49 ஆயிரம் ரொக்கப்பணம், உடைகள், உணவுப்பொருட்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியினர் திரண்டு வந்து போராடி தீயை அணைத்தனர்.
 
தீவிபத்து நடந்த இடத்துக்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆயிஷா மரியம் சுல்தான், துணை தலைவர் ஜெயினுதீன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் ஹமீது, நாடார் உறவின்முறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆறுதல் கூறினர். மேலும் முதல் உதவிகளையும் வழங்கினர். அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தனர்

 

https://www.maalaimalar.com/2010/08/04170803/worker-house-fire.html