புதுச்சேரி - முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தலா 2 சதவீதம் உள் இடஒதுக்கீடு

22/08/2010 09:03

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் மீனவர்களுக்கு, தலா 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கம், வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மீனவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அமைச்சரவைக்  கூட்டம், சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.

கூட்டத்தின் முடிவு குறித்து முதல்வர் வி.வைத்திலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் கூறியது: மீனவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டமன்ற மற்றும் மக்களவைத்  தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, மீனவர்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 12 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.

மறு கவுன்சலிங்: புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான மறு கவுன்சலிங்  விரைவில் நடத்தப்படும். தற்போது அறிவிக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை இதில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்கால், யேனம், மாஹே பகுதிகள் பின்தங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து பிராந்தியவாரியாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தற்போது அப்பகுதி மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர்.

இதனால் அடுத்த ஆண்டு பிராந்தியவாரியாக ஒதுக்கீடு தொடர்வதா? என்பது குறித்து, கமிட்டி அமைத்து ஆய்வு செய்யப்படும். புதுச்சேரிக்கான 75 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

மின் பற்றாக்குறை: புதுச்சேரிக்கு 240 மெகாவாட் மின்சாரம் போதுமானது. ஆனால் 190 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. இதற்கிடையில் நெய்வேலி, ராமகுண்டம், விஜயவாடா பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு மின்சாரம் வருவதால், அப்பகுதியில் மின்சார பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, மின் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வீர விளையாட்டு: புதுச்சேரியில் நவம்பர் 1-ம் நாள் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அரசு விடுமுறை விடப்படாது என்றார் முதல்வர்.