பெட்ரோல் விலை 56 பைசா குறைவு- இன்று நள்ளிரவு முதல் அமல்

08/10/2012 20:34

டெல்லி: சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதை தொடர்ந்து, பெட்ரோல் விலையில் 56 பைசா குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த 5 மாதங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெட்ரோல் விலை விரைவில் குறைக்கப்படும் என்ற செய்தி வெளியானது. ஆனால் எப்போது பெட்ரோல் விலை குறைப்பு அமல்படுத்தப்படும் என்பது வெளியாகாமல் இருந்தது. இது குறித்து மத்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வந்தன.

இந்த நிலையில் பெட்ரோல் விலையில் 56 பைசா குறைக்க போவதாக இன்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.