பெஸ்ட் பேக்கரி வழக்கின் சாட்சிகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்த்த உத்தரவு

11/07/2012 17:28

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, வதோதராவில் உள்ள பெஸ்ட் பேக்கரியை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த நான்கு ஊழியர்கள் அகமது சித்திக், ரயீஸ் கான், சாசாத் கான் பதன், ஷாலின் கான் பதன் ஆகியோர் வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியம் அளித்தனர். இதன் மூலம் 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. 

சாட்சியம் அளித்த நான்கு பேருக்கும் குஜராத் அரசு தலா ரூ.2 ஆயிரம் இழப்பீடு வழங்கியிருந்தது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் வி.எம்.கனடே, பி.டி.கோட் ஆகியார், ‘‘ பெஸ்ட் பேக்கரி வழக்கில் பல சாட்சிகள் விரோதமாக மாறினர். கடும் சோதனைகளை சந்தித்த முக்கிய சாட்சிகளுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. அதனால் அவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்தை குஜராத் அரசு வழங்க வேண்டும். முக்கிய வழக்குகளில் சாட்சிகளை பாதுகாக்கும் நடவடி க்கைகளை எடுக்க வேண்டும்’’ என கூறினர்.

dinakaran.com