மதவாதிகளுடன் நிதீஷ்குமார் கூட்டணி: சோனியா தாக்கு

18/10/2010 16:25

மதச் சார்பின்மைக்கு முற்றிலும் எதிரானவர்களுடன் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கூட்டணி வைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

பிகாரின் கிஷான்கஞ்ச் நகரில் இன்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியது:

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மையம் ஒன்றை பிகாரில் ஏற்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கான எல்லா வகையான ஒப்புதல்களையும் மத்திய அரசு வழங்கிவிட்டது. ஆனால் அந்த மையத்தை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை வழங்க மாநில இதுவரை முன்வரவில்லை. இதனால், அந்த மையத்தை நிறுவும் பணி தாமதமாகி வருகிறது.

மதச்சார்பின்மைக்கு எதிராக யார் செயல்பட்டு வருகிறார்களோ அவர்களுடன்தான் இந்த மாநிலத்தை ஆட்சி செய்பவர்கள் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு வகையான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக பிகாருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால் மாநில அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் காரணமாக நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு வழங்கிய பணம் எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக பிகாரை ஆட்சி செய்து வரும் பல்வேறு கட்சிகளால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. காங்கிரஸால் மட்டுமே பிகாரை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

இவ்வாறு சோனியா பேசினார்.

தினமணி