மனிதன் வாழும் தட்பவெட்பம் கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு

03/10/2010 09:30

பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, சாண்டா குரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னிஜ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து, சிவப்பு குள்ளனாக காட்சி தரும் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த கிளைஸ் 581 என்ற புதிய கிரகம் ஒன்றை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீவன் வோட் கூறியதாவது:பசுபிக் கடலில் உள்ள ஹவாய் தீவில் உள்ள கெக் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரத்தையும் அதன் சுற்று வட்டப்பாதையில் வலம் வரும் கிரகங்களையும் 11 ஆண்டுகளாக  ஆய்வு செய்து வருகிறோம்.அதிக வெப்பம் உள்ள கோள்களோ அல்லது அதிக குளிர் உள்ள கோள்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இல்லாமல், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று இருப்பது ஆய்வில்  தெரிய வந்துள்ளது.இந்த புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படுகிறது. துலா ராசி விண்மீன் நட்சத்திர கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுவரை 500 நட்சத்திர குடும்பங்கள் அறியப்பட்டுள்ளன. இதில், சூரிய குடும்பத் திற்கு அருகில் உள்ள நட்சத்திர குடும்பம் இது.பால்வெளி மண்டலத்தில் காணப் படும் கிரகங்களில், இந்த கிளைஸ் 581 கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது. குளிர்ந்து வரும் சிறிய நட்சத்தி ரத்தை ஆறு கிரகங்களில் ஒன்றாக இந்த கிரகம் சுற்றி வருகிறது. இது பூமியை போல் மூன்று அல்லது 4 மடங்கு பெரியது. தனது வட்டப்பாதையில் 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தில் -31 முதல் -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியனை பார்த்தபடி புதன் கிரகம் சுற்றி வருவது போல், இந்த கிரகத்தின் ஒரு பகுதி அதன் சூரியனை பார்த்தபடி சுற்றி வருகிறது.இதனால் இந்த கிரகத்தின் ஒரு பகுதி வெப்பமாகவும், ஒரு பகுதி குளிராகவும் உள்ளது. எனவே, இந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் பூமியை போன்ற சூழ்நிலை நிலவுகிறது. ஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவை பூமியில் உள்ளதை போன்று காணப்படுகிறது. எனவே, இந்த கிரகத்தின் மேற்பரப்பிலும் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இவ்வாறு ஸ்டீவன் வோட் கூறியுள்ளார்.

எவ்வளவு தூரத்தில் உள்ளது? இந்த கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா? பூமியில் இருந்து 172 டிரில்லியன் கி.மீ., தூரத்தில் உள்ளது.அதாவது 172க்கு பின்னால் 12 ஜீரோ சேர்த்தால் வரும் எண் தான் இந்த தூரம். இந்த தூரத்தை கடக்க ராக்கெட் ஒன்று ஒளியின் வேகத்தில் சென்றால் 20 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த கிரகத்தை அடைய முடியும்.ஒளியின் வேகத்தில் செல்லும் எந்த வாகனமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Dinamalar.