மாலேகான் குண்டு வெடிப்பு: லெப்.கர்னல் புரோகித்தை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

05/10/2010 15:39

மராட்டிய மாநிலம் மாலோகானில் நடந்த குண்டுவெடிப்பில் குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்திய இராணுவத்தில் பணியாற்றிய லெப்.கர்னல் புரோகித்தை பிணையில் விடுவிக்க இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மராட்டிய மாநிலம் மாலேகோவனில் உள்ள மசூதி ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 7 கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர்.

இந்த குண்டுவெடிப்பை சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றியதாக லெப்.கர்னல் எஸ்.பி.புரோகித், இந்து மதத் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மஹாராஷ்ட்ரா அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு்த தொடரப்பட்டு சிறையில் உள்ளனர்.

இவர்களில் லெப்.கர்னல் புரோகித், தான் இரண்டு ஆண்டுக் காலம் சிறையில் இருப்பதாகவும், எனவே தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இவருடைய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “பல பேர் கொல்லப்பட்ட மிக மோசமான குற்றச்செயல், அதில் விசாரணை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. எனவே விடுவிக்க இயலாது என்று கூறிவிட்டது.

தங்களை மராட்டிய மாநில அமைப்பு ரீதியான குற்றச்செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருப்பது சரியானதல்ல, என்றும் இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஒருவர் ஏற்கனவே அப்படியான குற்றம் செய்து தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று புரோகித், பிரக்யான் சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

வெப்துனியா