மாலேகாவ் குண்டுவெடிப்பு: முக்கிய எதிரி பிரவீண் முத்தாலிக் கைது

01/02/2011 23:38

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய எதிரியான  பிரவீண் முத்தாலிக், மகாராஷ்டி பயங்கரவாத தடுப்புப் படை போலீஸாரால் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.

 

 

திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அவர், மகாராஷ்டிர மாநில குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 14-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மாலேகாவில் குண்டு வைத்த மூன்று பேரில் பிரவீண் முத்தாலிக்கும் ஒருவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராம்ஜி, சந்தீப் ஆகிய இருவர் இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாத்வி பிரக்யா சிங், ராணுவ கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் ஆகியோர் முக்கியமானவர்கள்.

 

 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவில் கடந்த 2008 செப்டம்பர் 29-ம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி 1-02-2011