முன்னாள் இஸ்ரேலியப் பிரதமரின் ஜெர்மன் வருகை

17/09/2012 19:59

பெர்லின்: ஜெர்மனியின் ஐஸலோன் மாநகரில் வர்த்தகம் மற்றும் தகவல்
தொழினுட்பப் பள்ளியில் வருடாந்தம் இடம்பெறும் கருத்தரங்கில்
உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹூத் ஒல்மேர்ட், அமெரிக்கச்
செயலர் கொண்டலீஸா ரைஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் இஸ்ரேலியப் பிரதமரின் ஜெர்மன் வருகையை வன்மையாக ஆட்சேபித்து
ஆயிரக்கணக்கான ஜேர்மனியர்கள் அணிதிரண்டனர். பலஸ்தீன் கொடிகளை
அசைத்தவாறும், 2008 ஆம் ஆண்டு காஸாமீது இஸ்ரேல் மேற்கொண்ட
காட்டுமிராண்டித் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களின்
புகைப்படங்களை ஏந்தியவாறும் ஜெர்மனிய மக்கள் மாபெரும் எதிர்ப்புப்
பேரணியில் கலந்துகொண்டனர். "இவரை இங்கே உரையாற்ற அழைப்பதற்குப் பதிலாக,
போர்க்குற்ற விசாரணைகளுக்காக ஹேய்க்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு
அனுப்பிவையுங்கள்!" என்று பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் ஆதரவாளர்கள்
குரல் எழுப்பினர்.
ஜெர்மனியில் உள்ள பலஸ்தீன் சங்கத்தின் அங்கத்தவரான அலி அல் ஹிலா
வெளியிட்ட கருத்துரையின்போது, "எஹூத் ஒல்மர்ட் இஸ்ரேலியப் பிரதமராகப்
பணியாற்றிய காலகட்டத்தில் அப்பாவிப் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எதிராக
மேற்கொண்ட குரூரமான போர்க்குற்றங்களுக்குத் தம்முடைய எதிர்ப்பைத்
தெரிவிக்கவே ஆயிரக்கணக்கான ஜெர்மனியர்கள் இந்தப் பேரணியில்
கலந்துகொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
"ஒல்மர்ட்டை ஜெர்மனிக்கு அழைப்பது மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த
ஒருபோதும் உதவப்போவதில்லை. போர்க்குற்றவாளிகளுக்கு ஏற்ற  இடம் சர்வதேச
நீதிமன்றம்தானே ஒழிய, கல்வியாளர்கள் ஒன்றுகூடும் கல்வி நிறுவனம் அல்ல"
என்று பலஸ்தீன் ஆதரவாளரான நாபில் அபூ ஸ்டீனா அழுத்தம் திருத்தமாக
வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், "ஜெர்மன் அரசாங்கம் இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பாளர்கள் சர்வதேச சட்டங்களை ஏற்று நடப்பதற்கு அழுத்தம் கொடுக்க
முன்வரவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அல் ஹிலா தன்னுடைய அறிக்கையில், "ஜெர்மனிய அரசாங்கமும் ஐரோப்பிய
ஒன்றியமும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதையும், அதனுடன்
உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும். அதேவேளை,
பலஸ்தீன் மக்கள் தாமாக மனமுவந்து தேர்ந்தெடுத்த மக்கள் தலைமைக்கு எதிராக
அழுத்தம் கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், சர்வதேச
மாநாடுகளில் பலஸ்தீன் மக்கள் சார்பாகக் குரலெழுப்ப முன்வர வேண்டும்"
என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெர்மன் பொதுமக்களின் பெரும் எதிர்ப்பினால் ஒல்மர்ட் மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அதேவேளை, ஜெர்மன் அரசாங்கம் பெரும் தர்மசங்கடமான
நிலைக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more about ஒல்மர்ட்டின் வருகையை எதிர்த்து ஜெர்மனியில் மாபெரும்
பேரணி [5791] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com