முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்தில் பங்கேற்க அன்சாரிக்கு அழைப்பு?

12/10/2010 15:42

அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய கூட்டத்தில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கை தொடர்ந்த முகமது ஹாசிம் அன்சாரி தெரிவித்துள்ளார்.

 

 அயோத்தி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விவாதிக்க வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 16-ம் தேதி லக்னௌவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி, "வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிர்மோகி அகாரா அமைப்புடன் நடந்து வரும் சமரச பேச்சுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. இது ஆரம்ப கட்டம்தான்.

 

 வாரிய கூட்டத்தின்போது பேச்சுவார்த்தையை தொடர அனுமதி அளிக்குமாறு வாரியத்திடம் வேண்டுகோள் விடுக்க உள்ளேன். மேலும் நாட்டில் சமூக நல்லிணக்கத்தை காக்க வாரியத்துடன் இணைந்து கொள்கைத் திட்டம் ஒன்றை உருவாக்க முயல்வேன்' என்றார்.

 

 எனினும் அன்சாரி கூறியதை முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் சஃபாரியாப் ஜிலானி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வாரிய கூட்டத்தில் கலந்துகொள்ள அன்சாரிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது, அன்சாரி செயற்குழு உறுப்பினர் அல்ல' என்றார்.

தினமணி