முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விழங்கவேண்டும் - மாவட்ட ஆட்சியர் சகாயம்

28/11/2011 21:06

 

சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறினார். 
 
மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் தினவிழா நடைபெற்றது. விழாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,500 மதிப்பிலான காசோலைகள், உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் மகள்கள் 12 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.17ஆயிரம், திருமண உதவித்தொகை 2 பேருக்கு ரூ.4ஆயிரம், சமூக நலத்துறையின் மூலம் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.1.52 லட்சம் என மொத்தம் ரூ.1.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உ.சகாயம் வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:&
 
சிறுபான்மையின மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2011& 2012ம் கல்வியாண்டில் 1முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்காக 7,995 பேர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிளஸ்&1 முதல் பட்டயப்படிப்பு மற்றும் தொழில் கல்வி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்காக 1,771 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
 
தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் மகளிருக்கு தனிநபர் கடனாக 85 பேருக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மகளிர் உதவி சங்கங்கள் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் மற்றும் விதவை பெண்களுக்கு உதவித்தொகை, தொழிற்கடன், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 
உலமாக்கள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நலிவுற்ற சிறுபான்மையினரை உயர்த்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
 
இதுபோன்ற வாய்ப்புகளை சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதுடன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
விழாவில் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் காமாட்சி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சி.செல்வராஜ், ஐக்கிய ஜமாத் தலைவர் அஜிமுதின், அருட்தந்தை தாசைய்யன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
inneram.com