முஸ்லீம்களுக்கு எதிரான கருத்து - சுப்பிரமணியன் சுவாமி நடத்திய வகுப்புக்களை ரத்து செய்தது அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகம்

08/12/2011 22:29

 

சுப்பிரமணியன் சுவாமிஅமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணியம் சுவாமி விரிவுரையாற்றிவந்த கோடைக் கால சிறப்பு வகுப்புக்களை ரத்து செய்ய அந்தப் பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டாக்டர் சுவாமி இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதியாதாகவும், அதனால் அவரின் விரிவுரைகள் ரத்து செய்யவேண்டும் என்று மிகப் பெறும்பான்மையான பேராசிரியர்கள் வாக்களித்துள்ளனர்.

டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இந்த ஆண்டின் ஜூலை மாதம் மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் நடுப்பக்கக் கட்டுரையில், இந்தியாவில் இப்போது இருக்கும் முஸ்லீம்கள் தங்கள் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மும்பையில் அடுத்தடுத்து நான்கு குண்டு வெடிப்புக்ள் நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட இக் கட்டுரையில் குண்டுவெடிப்புகள் தொடர்ந்தால் முஸ்லீம்களின் வழிபாட்டு இடங்களை திரும்ப தாக்கி அழிக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.

தார்மீகப் பொறுப்பு

இது போன்ற கருத்துகள் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தை கேவலப்படுத்துவதாக இருப்பதாகவும் இது போன்ற ஒரு சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக இத்தகைய வெறுப்பைக் கக்கியவருடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு ஹார்வர்ட் பல்கலைக்கழக்த்துக்கு இருப்பதாக பல்கலைக்கழ்கத்தின் ஒப்பீட்டு மதத்துறைப் பேராசிரியை டயனா எக் கூறினார்.

சுவாமியின் இந்த கட்டுரை வெளிவந்த பிறகு, ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு சாரார் அவருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தினர். இதில் 400 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் ஸ்வாமி நடத்தும் பொருளாதாரம் தொடர்பான இரு பாடப் பிரிவுகளை முற்றாக நீக்குவதற்கு ஆதரவாக அறுதிப் பெறும்பான்மையான ஹாவர்ட் பல்கலைக் கழகத்தின் கலை அறிவியல் பாடப் பிரிவுப் பேராசிரியர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை முன் மொழிந்த ஹாவர்ட பல்கலைக் கழகத்தின் பேராசிரியை டயான எக், "அதிகம் பேரால் விரும்பப்படாத கருத்துக்களுக்கும் - ஏற்றுக் கொள்ளமுடியாத கருத்துக்களுக்கும் இடையே வித்தியசம் இருக்கிறது. சுவாமி நிச்சயமாக வரம்பை மீறியுள்ளார்". என்றார்.

ஆச்சர்யம்

சுவாமியின் கருத்துக்களை சுதந்திரமான கருத்துரிமை என்று பார்க்க முடியாது என்றும் இது துவேஷப் பேச்சு என்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு குறித்து சுப்பிரமணியண் சுவாமி ஆச்சர்யம் வெளியிட்டார். தனது கருத்தை கேட்காமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக சுவாமி தெரிவித்தார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறையில் 1965 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற சுவாமி, அதன் பிறகு அத்துறையில் இணைப் பேராசிரியராக சேர்ந்தார். 1970களில் அரசியலில் அவர் நுழைந்த பிறகும் கூட அவர் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து வகுப்புக்களை எடுத்து வருகிறார்.

அதே நேரம் சுவாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அவரின் கட்டுரை தொடர்பாக இந்தியாவிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.bbc.co.uk/tamil/india/2011/12/111208_howardsacksswami.shtml