யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்

20/12/2010 15:44

யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கர்கரே மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு தனக்குப் போன் செய்து, இந்து தீவிரவாதிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக தகவலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் திக்விஜய் சிங் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று நடந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திக்விஜய் சிங் பேசுகையில், நாஜிக்கள் எப்படி யூதர்களுக்கு எதிராக துவேஷத்துடன் செயல்பட்டனரோ அதேபோலத்தான் இப்போது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை செயல்படுகின்றன.

இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் பதியப்பட்டது 1992ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதுதான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குற்றம் சாட்டி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தனது ஆட்சியில்தான் ரேடியோ அலை ஒதுக்கீட்டில் பெரும் ஊழலை செய்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் தலைமையிலான துறைதான் இந்த ஊழலில் ஈடுபட்டது.

மேலும், மகாஜன் காலத்தில்தான் முதலில் வருவோருக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை என்ற நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதுவரை இருந்து வந்த ஏல முறையை நீக்கியவர் மகாஜன்தான்.

உ.பியில் முதல்வராக இருந்த இருவர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்துள்ளனர். இதுகுறித்து விரைவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும். (அவர்களது பெயரை திக்விஜய் சிங் குறிப்படிவில்லை. இருப்பினும் அவர் கூறியது மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் என்று கருதப்படுகிறது)

1930களில் ஹிட்லரின் நாஜிக் கட்சி யூதர்களை வெறித்தனமாக தாக்கியது. அதேபோல ஆர்எஸ்எஸின் கொள்கையும், முஸ்லீம்களைக் குறி வைத்தே உள்ளது. தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லீ்ம்களை அழிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கிறது.

இந்தியாவில் தீவிரவாதத்தின் விதையை விதைத்தவர் அத்வானிதான். அவர் 1992ல் நடத்திய ரத யாத்திரைதான் தீவிரவாதத்தின் வேராகும்.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.

அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள் என்கிறார் அத்வானி. அவர் கூறுவது போலவே, அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் அனைத்து இந்துத் தீவிரவாதிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று நாம் சொல்லலாமா.

சிசு மந்திர் பள்ளிகளில் குழந்தைகளிடம் முஸ்லீம் துவேஷத்தை விதைத்து வருகிறது ஆர்எஸ்எஸ். இது நாட்டுக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.

  

அதிகாரவர்க்கம், காவல்துறை, ஏன் ராணுவத்திலும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊடுறுவியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் வன்முறை மற்றும் துவேஷக் கொள்கைகள் நாட்டுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அடுத்த பெரும் சவால்கள், கம்யூனிஸ்டுகளும், பிராந்திய அரசியல் தலைவர்களும் என்றார் திக்விஜய் சிங்.

oneindia.in