ராமநாதபுரத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய சிறுவர்கள் 4 பேர் கைதானார்கள்

15/12/2010 12:08

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். இவர் அங்குள்ள வண்டிக்கார தெரு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் விலையுயர்ந்த ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

கடந்த 2 வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக செல்போன் கடையில் வழக்கத்தைவிட வியாபாரம் குறைவாகவே இருந்தது. இதனால் இரவு 8 மணிக்கே காஜா மைதீன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவந்தார்.
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அங்கு வந்த “மர்ம” ஆசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடிக் கொண்டு அவர்கள் அங்கி ருந்து தப்பி சென்றனர்.
 
மறுநாள் காலை கடையை திறக்க வந்த காஜா மைதீன் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் செல்போன்கள் கொள்ளை போனது குறித்து அவர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன், சப்- இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசா ரணையில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்தது சிறுவர்கள் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுவர்களை கண் காணித்து வந்தனர். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது சிறுவர்கள்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
 
இதையடுத்து அந்த சிறுவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களும் பறி முதல் செய்யப்பட்டன. சிறு வயதிலேயே 4 பேர் சேர்ந்து துணிகர கொள்ளை சம்பவத்தில் இறங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

maalaimalar.com