ராமநாதபுரத்தில் கார் மோதி கணவன் பலி; மனைவி கவலைக்கிடம்

01/08/2012 21:44

 ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். (வயது 42) இவர், அண்மையில் மலேசியாவில் இருந்து வந்துள்ளார். ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்காக, ராமநாதபுரத்துக்கு மனைவியை பைக்கில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். தொழுகை முடிந்து திரும்பும்போது, பட்டினம்காத்தான் சோதனைச்சாவடி அருகே வந்தபோது, ராமேஸ்வரத்தில் இருந்து வந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து அப்துல் ஹகீம் மீது மோதியதாம். இதில் ஹகீம் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மனைவி சீனிமரியம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸார் விபத்தின்போது தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

தினமணி